என் மலர்
வழிபாடு
சாமிதோப்பு வடக்குவாசல் மகிமை
- தவத்தின் போது நீரைமட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.
- பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார்.
அய்யா வைகுண்டசாமியின் தலைமைப்பதியாக திகழும் சாமிதோப்பில் உள்ள முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலுக்கு வருவார்கள். அவர்கள் வந்ததும் அய்யாவை வழிபடுவார்கள்.அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால், இதனை "தல வாசல்" என்றும் அழைப்பார்கள். முற்காலத்தில் பகவான் அய்யா வைகுண்டர் தவம் புரிய தீர்மானித்தார். அதனால் சாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் அய்யா வைகுண்டர் 6 ஆண்டுகள் தவம் புரிந்தார்.
தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அந்த தவத்தின் போது நீரைமட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.
அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். இத்தவத்தின் போது பாலையும், பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார்.
மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனை நார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார். இவ்வாறு அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்கு வாசல் அமைக்கப்படுகின்றன.
தலைமைப்பதியாம் சாமிதோப்பில் அமைந்துள்ள வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார். அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக, "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்று வழிபடுகின்றனர்.
வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தூண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப்பட்டு இருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபட வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்" என்ற உயர்ந்த கொள்கையாகும். 'நான்' என்றால் பகவானாகிய அய்யா வைகுண்டரை குறிக்கிறது.
நிலை கண்ணாடியை வழிபட்ட பின்னர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இட வேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண், அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.
திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து, அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்து கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மகிமை அன்றே வெளிப்பட்டது. பக்தர்களின் நோயை குணப்படுத்தும் மகத்துவம் உடையது.
தலைமைப்பதியின் வடக்கு வாசலின் முகப்பில் உள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும், அழகாகவும் இருக்கிறது. இங்கு வழிபடும் பக்தர்களுக்கு அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.