search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்பை வெளிக்காட்டும் அறிகுறிகள்
    X

    ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்பை வெளிக்காட்டும் அறிகுறிகள்

    • ஒருவருடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும்.
    • ஒருசில அறிகுறிகளை கொண்டே உடலில் ரத்த ஓட்டம் மோசமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    மனித உடலிலில் சராசரியாக 4.5 லிட்டர் முதல் 5.5 லிட்டர் வரை ரத்த ஓட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உடல் வெப்பம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீராக பராமரிப்பதற்கு ரத்த ஓட்டமும் சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியமானது. ஒருவருடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் பல்வேறு உடல் உபாதைகளை அவர் எதிர்கொள்ள நேரிடும். மூளை, நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும். ஒருசில அறிகுறிகளை கொண்டே உடலில் ரத்த ஓட்டம் மோசமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

    குளிர்ச்சி: உடல் வெப்ப நிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் ரத்த ஓட்டத்திற்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது. உள் உறுப்புகளுக்குள் ரத்த ஓட்டம் சீராக செல்லாமல் மோசமான நிலையில் பயணித்தால் குளிர் காய்ச்சல் உண்டாகும். கைகள், பாதங்களில் இயல்பான வெப்பநிலை குறைந்து குளிர்ச்சித்தன்மைக்கு மாறிவிடும்.

    வீக்கம்: ரத்த ஓட்ட செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் சிறுநீரகங்களில் அதன் தாக்கம் வெளிப்படும். அதன் காரணமாக கைகள், கால்கள், பாதங்கள் போன்ற இடங்களில் வீக்கம் உண்டாகும். அந்த பகுதிகளில் ரத்தத்தின் அளவு குறைந்து உடலில் உள்ள நீர்மம் அப்படியே தேங்கிவிடும். அதன் காரணமாகவே வீக்கம் உண்டாகிறது.

    களைப்பு: கடினமான வேலைகளை செய்யும்போது களைப்பு, சோர்வு ஏற்படுவது இயல்பானது. வழக்கத்தைவிட வேகமான செயல்பாடுகளில் ஈடுபடும்போது இதய துடிப்பு அதிகரிக்கும். அப்போது சீரற்ற சுவாசம் நிகழும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அப்படி அல்லாமல் அடிக்கடி களைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதுதான் அதற்கு காரண மாகும். ரத்த ஓட்ட செயல்பாடுகளில் சீரற்ற தன்மை நிலவும்போதுதான் ஆக்சிஜன் அளவு குறையும். அதனை கருத்தில் கொண்டு சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

    செரிமானம்: உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் இரைப்பை குடல் பாதையில் ரத்தத்தின் செயல்பாடு குறைந்துபோய்விடும். அதன் தாக்கம் செரிமானத்தில் பிரதி பலிக்கும். வழக்கத்தைவிட செரிமானம் மந்தகதியில் நடைபெறும். மலச்சிக்கல் பிரச் சினையையும் அனுபவிக்க நேரிடும்.

    நோய் எதிர்ப்பு சக்தி: ரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் உள்ளுறுப்புகளை தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் கட்டமைப்பு பலவீனமடைந்துவிடும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துபோய்விடும். அதன் காரணமாக, ஏதேனும் ஒரு உடல்நல குறைபாட்டால் அடிக்கடி அவதிப்பட நேரிடும்.

    ஞாபக மறதி: மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்வது அவசியமானது. உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இல்லை என்றால் மூளையின் செயல் பாடும் குறைந்துபோய்விடும். கவன சிதறல், ஞாபக மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    பசியின்மை: ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேர்ந்தால் பசியிலும் அதன் தாக்கத்தை உணரலாம். அடிக்கடி பசியின்மை பிரச்சினையை எதிர்கொண்டால் உடலில் ரத்த ஓட்டம் மோசமாக இருப்பதும் ஒருவகையில் காரணமாக அமைந்திருக்கும்.

    சரும நிறம்: உடலில் உள்ள திசுக்களுக்கு போதிய அளவில் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் சருமத்தின் நிறத்தில் மாற்றம் தென்படும். குறிப்பாக கருஞ்சிவப்பு அல்லது நீல நிறத்தில் சருமம் காட்சியளிக்க தொடங்கும். விரல்கள், குதிகால்களில் வலி, நகங்கள் பலவீனமடைதல், நகங்கள் உடைதல், முடி உதிர்தல் போன்றவையும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.

    Next Story
    ×