search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இன்று பக்தர்கள் மலையேற குவிந்தனர்
    X

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இன்று பக்தர்கள் மலையேற குவிந்தனர்

    • மாலை சனி பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
    • இரவில் பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 8-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 9-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதல் பல்வேறு வாகனங்கள் மூலம் தாணிப்பாறைக்கு வந்தனர்.

    அங்கு வனத்துறை கேட் பகுதியில் காத்திருந்தனர். இன்று பங்குனி மாத சனிப்பிரதோஷம் என்பதால் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அப்போது பாலித்தீன் கேரி பேக் போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு போதை வஸ்து பொருட்கள், மது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என தீவிர சோதனை செய்து அனுப்பினர்.

    வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலையேறி சென்றனர். மாலை சனி பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இரவில் பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள்.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபட்டனர். நாளை மறுநாள் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர். சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் இருந்து தாணிப்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மருத்துவக் குழுவினர் இல்லாத நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே கடந்த அமாவாசையின்போது சதுரகிரியிலும், வெள்ளிங்கிரி மலையிலும் பக்தர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே மருத்துவக்குழுவை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×