search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் ஆண்டாளுக்கு சாற்றப்படும் திருப்பாவை பட்டு
    X

    பட்டுப்புடவையில் பொறிக்கப்பட்ட ஆண்டாளின் திருவுருவம் மற்றும் திருப்பாவை பாடல்கள். திருப்பாவை பட்டு அணிந்து காட்சி தரும் ஆண்டாள்

    ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் ஆண்டாளுக்கு சாற்றப்படும் திருப்பாவை பட்டு

    • 10 நாள் ஆண்டாளுக்கு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறும்.
    • இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது.

    ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்புகள் ஏராளம். பெரியாழ்வார் மட்டுமின்றி, ஆண்டாளும் ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார். பெருமாள் மீது கொண்ட காதலால், அவர் நினைவாக பாடிய 30 பாடல்கள், திருப்பாவையாக மிளிர்கின்றன. ஆண்டாளுக்கு 'கோதை', 'நாச்சியார்' என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. கோதை ஆண்டாள், 'தமிழையும் ஆண்டாள்' என்பது சொல் வழக்கு. ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களை, எந்த மொழியில் மொழிபெயர்த்து பாடினாலும் கேட்பவருக்கு தமிழில் பாடுவது போன்ற உணர்வு இருக்குமாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் விழா நடக்கும். மற்ற மாதங்களைவிட மார்கழியில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மார்கழி மாதத்தில் பகல் பத்து உற்சவமும், பின்னர் ராப்பத்து உற்சவமும் நடைபெறும். அதன் பிறகு 10 நாள் ஆண்டாளுக்கு மார்கழி நீராட்ட உற்சவம் நடைபெறும். பகல் பத்து உற்சவம் தொடங்கும் போது, ரெங்கமன்னாருடன் ஆண்டாள் எழுந்தருளி, தான் வளர்ந்த வீட்டிற்கு வருவார். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அங்கு வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பெரியாழ்வார் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை வீட்டில் தயார் செய்து, பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிப்பார்கள்.

    திருப்பாவை பாடல்களை இயற்றிய ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாவை பட்டு ஒன்றை ஆண்டாளுக்கு சமர்ப்பித்தனர். அது அரக்கு நிறம் கொண்டது. இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், அதில் ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடல்கள் இருக்கும். இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், அதாவது மார்கழி முதல் தேதியில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பல லட்ச ரூபாய் செலவில் பக்தர் ஒருவர் சமர்ப்பித்திருந்த, 30 திருப்பாவை பாடல்களுடன் அச்சிடப்பட்ட ஊதா நிற பட்டுப்புடவை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டுப்புடவையில், ஆண்டாள் முழு உருவத்தையும் பட்டு நூல்களால் சேர்த்துள்ளனர்.

    இந்த பட்டுப்புடவையின் நீளம் 18 கெஜம். ஒரு கெஜம் என்பது கிட்டத்தட்ட 3 அடி ஆகும். மிக மெல்லிதாகவும், வேலைப்பாடுடனும் நெய்யப்பட்டு இருக்கும் இந்த புடவையானது, அப்படியே ஆண்டாள் விக்ரகத்துக்கு சாற்றப்பட்டு, அவர் எழுந்தருளும் போது, அவ்வளவு நீளமான பட்டுப்புடவையை எப்படி இவ்வளவு சிறிதாக மடித்து சாற்றினார்கள் என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.

    இந்தப்பட்டின் பெருமைகள் குறித்து ஆண்டாள் கோவில் ஸ்தாணிகம் ரமேஷ் கூறியதாவது:-

    ஆண்டாளுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் தேதியில் திருப்பாவைப்பட்டு அணிவிக்கப்படும். இந்த புடவையில் 30 திருப்பாவை பாடல்களும், ஆண்டாள் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. பட்டு நூல்களால் இழைக்கப்பட்ட இந்தப் பட்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆண்டாளுக்கு சாத்தப்படும். அதிகாலை அணிவிக்கப்படும் இந்தப் புடவையிலேயே, அன்றைய தினம் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு ஆண்டாள் காட்சி அளிப்பாா்.

    திருப்பாவைப் பட்டில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் காட்சியளிப்பதை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையையும், ஆண்டாளே வந்து பிறந்ததாக கொண்டாடுவது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெண்கள் வெளியூர்களுக்கு திருமணம் ஆகி சென்றாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து ஆண்டாளை தரிசித்துச் செல்வார்கள். தற்போதும் அந்த ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டாள் வேடம் அணிந்து அழகு பார்ப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆண்டாள் வேடம் அணிந்து குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வருவர். மார்கழி மாதத்தில் ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் இன்றும் உள்ளது. பூமா தேவியாக பிறந்த ஆண்டாளின் கோவிலுக்கு, வாழ்நாளில் ஒரு முறையேனும் வந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பல மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புடவைக்கு சிறப்பு பூஜை

    ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டாளுக்கு அணியப்படும் பட்டுபுடவையை மற்ற நாட்களில் பீரோவில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். மார்கழி மாதம் அன்று அந்த புடவையை பீரோவில் இருந்து எடுப்பர். பின்னா் அந்த புடவையை ஆண்டாள் முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்வர். ஆண்டாளுக்கு பிடித்த பழங்கள், பொருட்கள் ஆகியவை இந்த பூஜையின் போது இருக்கும். சிறப்பு பூஜை முடிந்த பிறகு திருப்பாவை பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்படும்.

    Next Story
    ×