search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தைப்பூச திருவிழா கோலாகலம்- முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
    X

    தைப்பூச திருவிழா கோலாகலம்- முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

    • ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

    முருகப்பெருமானின் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடவரைக்கோயிலான இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மூலவரான முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பழனி

    அறுபடைவீடுகளில் 3-வது படைவீடான பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் பாதையாத்திரையாக வந்தும் முருகப்பெருமான தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்

    தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் வேல் குத்தி காவடி எடுத்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்கு பின் சுவாமி அலை வாயு கந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோவில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×