search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி மாதத்தில் நடை சாத்தப்படுவதில்லை
    X

    ஆடி மாதத்தில் நடை சாத்தப்படுவதில்லை

    • ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை அன்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும்.
    • ஆடி மாதத்தன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    ஆண்டு தோறும் ஆடி மாதத்தன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விடும். உடனடியாக அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படும். பிறகு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

    ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும். அந்த அலங்காரத்தில் அம்மனை வழிபடுவது கண்கொள்ளா காட்சி யாக இருக்கும்.

    முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் நடை அடைக்கப்பட்டு விடுவது உண்டு. ஆனால் ஆடி மாதம் பக்தர்கள் வருகை ஆண்டு தோறும் அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக மேல்மலையனூர் மேல்தலத்தில் பகலில் நடைசாத்தப்படுவது இல்லை.

    எனவே பக்தர்கள் நாள் முழுக்க அங்காளம்மனை தரிசனம் செய்ய முடிகிறது. நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு இது வசதியாக உள்ளது. இரவு 9 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.

    அமாவாசை அன்று இரவு முழுவதும் கோவில் திறந்து இருக்கும். ஊஞ்சலில் உற்சவரை காணும் மக்களில் பலர் கருவறை அம்மனையும் வழிபட்டு செல்கிறார்கள்.

    அங்காளம்மனை அமைதிப்படுத்தும் நிகழ்வு ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டுவதை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்யும் நடைமுறை வழக்கம் சுமார் 28 ஆண்டுக்கு முன்புதான் தோன்றியது. மிக குறுகிய காலத்துக்குள் இது பக்தர்கள் மத்தியில் இடம் பிடித்து உள்ளது.

    அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும் போது சில பக்தர்கள் ஆர்வ மிகுதியால் தேங்காய், எலுமிச்சை, பழத்தில் சூடம் ஏற்றி வழிபடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று கோவில் நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் இத்தகைய வழிபாட்டை, பக்தர்கள் தவிர்ப்பது நல்லது என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    Next Story
    ×