search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருநாகேஸ்வரம் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி: புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
    X

    திருநாகேஸ்வரம் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி: புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

    • அஸ்திரதேவருக்கு சூரிய புஷ்கரணியில் அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி தினந்தோறும் நான்கு வீதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நேற்று காலை 9 மணிக்கு கோவி்ல் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 50 நாதஸ்வர வித்வான்கள், 50 தவில் வித்வான்கள் இணைந்து மல்லாரி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளினர். அஸ்திரதேவருக்கு சூரிய புஷ்கரணியில் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமம் செய்யப்பட்ட கடஅபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கொட்டும் மழையில் சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது குளத்தின் நான்கு புறமும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சூரிய புஷ்கரணியில் இறங்கி நீராடி வழிபட்டனர். பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி வி. சிவலிங்கம், துணைத்தலைவர் உதயாஉப்பிலி, ஆர். பாலா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரிதுரைராஜ், திருநாகேஸ்வரம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் பழனிசாமி உள்ளிட்ட கோவில் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தா. உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×