என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![திருவாடானையில் சினேகவல்லி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் திருவாடானையில் சினேகவல்லி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/04/1740741-thriuvadanai.jpg)
திருக்கல்யாண கோலத்தில் சாமி-அம்பாள் அருள்பாலித்த காட்சி.
திருவாடானையில் சினேகவல்லி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் திருக்கல்யாணத்தையொட்டி மொய் எழுதி விருந்து சாப்பிட்டு சென்றனர்.
திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி சாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையொட்டி சாமி, அம்பாள் கோவிலில் இருந்து பரிவார தெய்வங்களுடன் நூற்றுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த மணமேடையில் சாமி, அம்பாள் பரிவார தெய்வங்களுடன் காட்சி அளித்தனர். தொடர்ந்து சினேக வல்லி அம்மனுக்கு சப்த கன்னிகா பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து ஆலய குருக்கள் சவுந்தர தியாகராஜ குருக்கள், சுப்பிரமணிய சிவாச்சாரியார், சந்திரசேகர சிவாச்சாரியார், வைரவ சுப்ரமணிய ஆச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக வேள்விகளை நடத்தினர்.
தொடர்ந்து சாமி-அம்மனுக்கு காப்பு கட்டுதல், மாலை அணிவித்தல், வஸ்திரம் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமி-அம்பாள், பெருமாளுக்கு திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சிவாச்சாரியார் சாமியின் கையில் இருந்த தாலியை எடுத்து அம்பாளுக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்கள் சாமி-அம்பாள் திருக்கல்யாணத்தையொட்டி மொய் எழுதி விருந்து சாப்பிட்டு சென்றனர். நிகழ்ச்சியில் தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், தேவகோட்டை இரட்டை அரு நகரத்தார்கள் வகையறாக்கள், நாட்டார்கள் நகரத்தார்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.