search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று மத்யாஷ்டமி: முன்னோர் வழிபாட்டில் தவறவிடக்கூடாத நாள்கள்!
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இன்று மத்யாஷ்டமி: முன்னோர் வழிபாட்டில் தவறவிடக்கூடாத நாள்கள்!

    • மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை.
    • பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது.

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இதில் மத்யாஷ்டமி முக்கியமான தினம்.

    பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மகாளய பட்சம் என்பது ஆவணிமாத பவுர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாள்களைக் குறிக்கும். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். பதினைந்து நாள்கள் நம் முன்னோர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக பூலோகம் வந்து தங்கும் காலமே மகாளய பட்சம் எனப்படுகிறது.

    ஒவ்வோரு அமாவாசை அன்றும் நாம் வழங்கும் தர்ப்பணங்களை எமதர்மராஜன் ஏற்று நம் முன்னோர்களுக்கு வழங்குவாராம். ஆனால் மகாளயபட்சத்தின் போது 'பித்ரு லோகத்தில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு சென்று வாருங்கள்' என்று அவர்களை அனுமதிப்பாராம்.

    நம் முன்னோர்களுக்கு பிரியமான இடம் நம் வீடுதானே! எனவே அன்று நம் பித்ருக்கள் கூட்டமாக நம் வீட்டுக்கு வருவார்கள் என்கின்றன சாஸ்திரங்கள்.

    மகாளயபட்சத்தின் முக்கியமான நாள்கள்

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்தப் பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் முன்னோர்கள்.

    கட்டாயம் மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அது தவிர மீதமுள்ள நாள்களில் ஏதேனும் ஒருநாள் நாம் தர்ப்பணம் முதலிய வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய நாள்களாக, மகாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, மஹாவியதீபாதம், சந்நியஸ்தமாளயம், கஜச்சக்ஷமாளயம், மகாளய அமாவாசை ஆகிய நாட்களை வகுத்து தந்திருக்கிறார்கள்.

    பொதுவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யும்போது மூன்று தலைமுறை தாய், தந்தையருக்கு மட்டுமே தர்ப்பணம் வழங்குவோம். ஆனால் மகாளயபட்சத்தில் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் அறியாதவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தர்ப்பணம் செய்யமுடியும்.

    இந்த நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. மகாபரணி தந்தை, தாய் இறந்த திதி எதுவென்று அறியாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய நாள். முறையாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், வழிபாடு செய்ய உகந்த நாள் மத்யாஷ்டமி.

    குடும்ப சுமங்கலிகளை வழிபட உகந்த தினம் அவிதவாநவமி. 27 யோகங்களில் ஒன்றான வியதீபாத யோகம் மகாளய பட்சத்தின்போது ஏற்பட்டால் அது மகாவியதீபாத யோகம் என்று அழைக்கப்படும். இந்த நாளில் செய்யப்படும் பித்ருவழிபாடு சகல நன்மைகளையும் பெற்றுத்தரும்.

    இந்த ஆண்டு மத்யாஷ்டமி இன்று. மகாளய பட்சத்தின் 15 நாள்களில் நடுநாயகமாகத் திகழ்வது இந்த மத்யாஷ்டமி. எனவே இந்த நாள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மத்யாஷ்டமி அன்று தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளை செய்தால் மகாளய பட்சம் முழுவதும் முன்னோர்வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் அறிவாற்றல் பெருகி காரியங்களில் வெற்றி கிடைக்கும். எனவே காரியத்தடைகள் விலக கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மத்யாஷ்டமி வழிபாடு.

    குடும்பங்களில் சுமங்கலிகளாக வாழ்ந்து மறைந்த பெண்கள் குடும்பத்தினைக் காக்கும் தெய்வங்களாகத் திகழ்வர் என்பது நம்பிக்கை. முறையாக சுமங்கலி வழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்யாதவர்கள் குடும்பங்களில் சுபகாரியத் தடைகள் நிகழும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு முன்பாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உள்ளன. மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி சுமங்கலி வழிபாட்டுக்கானது. இந்த நாளில் வீட்டின் மூத்த பெண்களை நினைத்து வழிபடுவதோடு, புடவை முதலிய மங்கலப்பொருள்களை தானம் செய்வதன் மூலம் சுமங்கலிகளின் ஆசி நமக்குக் கிடைக்கும்.

    பித்ரு தோஷம்?

    இதேபோன்று சந்நியாசிகளுக்கு உரிய திதி சந்நியஸ்தமாளயம், கணவரை இழந்த விதவைகள் செய்வதற்க்கான கஜச்சக்ஷமாளயம் மற்றும் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய சஸ்த்ரஹதமாளயம் ஆகிய நாள்கள் முக்கியமானவை. இந்த நாள்களில் முன்னோர் வழிபாடு செய்வது வாழ்வில் இருக்கும் துன்பங்களை நீக்கி நன்மைகள் சேர்ப்பவை.

    ஜாதகத்தில் பித்ரு தோஷம்

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும்.

    ராகு - கேது

    இத்தகைய பித்ரு தோஷம் உடைய ஜாதகக் காரர்களுக்கு அருமருந்தாகத் திகழ்வது இந்த மகாளயபட்சம். மகாளயபட்ச நாள்களில் தினமும் குளித்து பித்ருக்களை வழிபடுவதன் மூலம் அனைத்து தோஷங்களையும் நீக்கலாம். குறிப்பாக இந்த நாள்களில் வறியவர்களுக்கு உணவு, உடை ஆகியன வற்றை தானம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம். முன்னோர்களின் ஆசி நமக்கு அனைத்து நலன்களையும் பெற்றுத்தரும்.

    Next Story
    ×