என் மலர்
வழிபாடு

இன்று மகாசிவராத்திரி: சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

- அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 28-ந்தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்தாண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே சதுரகிரிக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பஸ் கார், வேன் மூலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரமான தாணிப்பாறையில் தங்கி அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சிவராத்திரி என்பதால் நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிய தொடங்கினர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர்.
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பக்தர்கள் ஏராளமானோர் உற்சாகமாக மலையேறினர். சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கூட்டம் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாரை சாரையாக சென்றனர். 4 முதல் 5 மணி நேரம் நடந்து சென்று பக்தர்கள் சுந்தர, சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியை முன்னிட்டு கோவில் பகுதி மற்றும் அடிவாரத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகள் நடைபெற்றன. இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இரவில் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை.