search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தர்ப்பணத்தின் வகைகள்
    X

    தர்ப்பணத்தின் வகைகள்

    • முறையாக சன்னியாசம் பெற்ற முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம்.
    • இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும்.

    * நம் குடும்பத்தில் நம்முடன் வாழ்ந்து அல்லது நமக்கு முன் வாழ்ந்து மறைந்த, முறையாக சன்னியாசம் பெற்ற முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சிரார்த்தம் இது. மஹாளய பட்சத்தில் வரக்கூடிய துவாதசி திதி அன்று இதனை செய்ய வேண்டும். அன்று செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். இதற்கு 'ஸன்யஸ்த மகாளயம்' என்று பெயர்.

    * கணவனும், மகனும் இல்லாத பெண், தன் கணவர், மாமனார், மாமியார் மற்றும் முன்னோர்களுக்காக மகாளய அமாவாசை அன்று சங்கல்ப சிரார்த்தம் செய்யலாம். இதற்கு 'விதவா மகாளயம்' என்று பெயர்.

    * சுமங்கலியாக வாழ்ந்து இறந்த பெண்களுக்காக (பாட்டி, சகோதரி, தாய், அத்தை, சித்தி), மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி அன்று திதி செய்ய வேண்டும். இதற்கு 'அவிதவா நவமி' என்று பெயர். இதை முறையாக செய்யும்பொழுது அந்த குடும்பத்தில் பெண் சாபங்கள் விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும். வரும் காலங்களில் அந்த குடும்பத்தில் பெண்கள் விதவையாகும் நிலை உருவாகாது. இந்த நாளில் தங்களால் இயன்றவர்கள், சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு வரச் சொல்லி புடவை, ரவிக்கை, குண்டு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து வணங்கலாம்.

    * நம் குடும்பம் சம்பந்தப்பட்ட யாராவது துர்மரணம் அடைந்திருந்தால், அதாவது தண்ணீரிலோ, நெருப்பிலோ அல்லது தூக்கு போட்டு, விபத்துகளில், கொடிய மிருகங்களில் தாக்குதலில் அல்லது மற்றவர்களால் கொலை செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு மகாளய பட்ச காலத்தில் வரும் சதுர்த்தசி திதியன்று சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம். இதனால் அந்த குடும்பத்தில் துர்மரணம் நிகழாது. இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையும். இதற்கு `சஸ்திரஹத மகாளயம்' என்று பெயர்.

    * தர்ப்பணம் செய்வதில், 'தேவ தர்ப்பணம்' என்று ஒன்று உள்ளது. சுண்டுவிரல் அடிப் பாகத்தால் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும். தண்ணீர், அட்சதை (அரிசி) மட்டும் இதில் பயன்படுத்தப்படும். சிலர் எள் சேர்த்தும் செய்வர். இந்த தர்ப்பணத்தை, தாய் - தந்தை உயிருடன் உள்ளவர்கள் கூட செய்யலாம்.

    இந்த தர்ப்பணத்தைச் செய்யும்போது, கேசவம் தர்ப்பயாமி, நாராயணம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி, கோவிந்தம் தர்ப்பயாமி, விஷ்ணும் தர்ப்பயாமி, மதுசூதனம் தர்ப்பயாமி, த்ரிவிக்கிரமம் தர்ப்பயாமி, வாமனம் தர்ப்பயாமி, ஸ்ரீதரம் தர்ப்பயாமி, ரிஷிகேசம் தர்ப்பயாமி, பத்மநாபனம் தர்ப்பயாமி, தாமோதரம் தர்ப்பயாமி, ஆதித்யம் தர்ப்பயாமி, சோமம் தர்ப்பயாமி, அங்காரகம் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, பிரகஸ்பதி தர்ப்பயாமி, சுக்ரம் தர்ப்பயாமி, சனீஸ்வரம் தர்ப்பயாமி, ராகும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி என்று சொல்ல வேண்டும்.

    Next Story
    ×