search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் 4-ந்தேதி தேரோட்டம்
    X

    கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதையும், சிறப்பு அலங்காரத்தில் மங்களநாயகி வீற்றிருந்த காட்சியையும் படத்தில் காணலாம்.

    திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் 4-ந்தேதி தேரோட்டம்

    • 3-ம்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 5-ந் தேதி திருவிழா நிறைவு பெறுகின்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சன்னதியில் அமைந்துள்ள மரகத நடராஜர் வருடத்தில் திருவாதிரை நாள் மட்டுமே சன்னதி திறக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக மரகத நடராஜரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மங்களநாயகி அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பன்னீர், திரவியம், தேன், மா பொடி, இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன.

    தொடர்ந்து அம்மன் சன்னதி மண்டபத்தில் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த மங்களநாயகி மற்றும் விநாயகப் பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 8-வது நாள் நிகழ்ச்சியாக மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    திருவிழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக வருகிற மே 4-ந் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக பத்தாவது நாளான வருகின்ற மே மாதம் 5-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தீர்த்த உற்சவத்துடன் நிகழ்ச்சி நடைபெற்று சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

    திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் தலைமையில் சமஸ்தான தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    அதுபோல் திருஉத்தரகோசமங்கை கோவிலில் சித்திரை திருவிழாவிற்காக கடந்த ஆண்டு தான் புதிதாக தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    புதிதாக செய்யப்பட்ட தேரில் 2-வது ஆண்டாக இந்த ஆண்டு சுவாமி அம்பாள் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×