search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வளர்ச்சிக்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வளர்ச்சிக்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி

    • விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    • சொர்க்க வாசலின் வழியாக நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும்.

    பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்கு பல விழாக்கள் இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி பக்தர்களின் மனதில் இடம்பெற்ற முக்கியமான பக்தித் திருவிழாவாகும். இந்த ஏகாதசியன்று 'சொர்க்க வாசல் நுழைதல்' என்ற நிகழ்வு விஷ்ணு ஆலயங்கள் தோறும் நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசி என்று வரும்பொழுது சொர்க்க வாசலை திறந்து வைப்பார்கள். ஆண்டு முழுதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் சேரும்.


    மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள். இவ்வாறு புனிதமான மாதமாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில், நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    ரொக்கத்திற்கு' முக்கியக்கவம் கொடுக்கும் நாம், 'சொர்க்கத்திற்கு' முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா? அந்த விழா இந்த மார்கழி மாதம் தான் வருகின்றது.

    வைணவத் தலங்களில் எல்லாம் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழா மார்கழி 26-ந்தேதி (10.1.2025) அன்று வருகிறது.

    பதினாறு பேறுகளுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை, நாம் 'பெருமாள்' என்று செல்லமாக அழைக்கிறோம். அவருக்காக கட்டிய கோவிலை 'பெருமாள் கோவில்' என்கிறோம். அவரை வழிபட்டால் நமக்கு பதினாறு விதமான பேறுகளும் வந்துசேரும் என்பதை நாம் அனுபவத்தில் உணரலாம்.

    காக்கும் கடவுள் என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு, ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், அவற்றில் 16 திருநாமங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை:-

    1. ஸ்ரீவிஷ்ணு

    2. நாராயணன்

    3. கோவிந்தன்

    4. மதுசூதனன்

    5. ஜனார்த்தனன்

    6. பத்மநாபன்

    7. ப்ரஜாதிபதி

    8. வராகன்

    9. சக்ரதாரி

    10. வாமணன்

    11. மாதவன்

    12. நரசிம்மன்

    13. திரிவிக்ரமன்

    14. ரகுநந்தனன்

    15. ஜலசாயினன்

    16. ஸ்ரீதரன்


    பதினாறு பேறுகளையும் வழங்கும், பெருமாளின் இந்த 16 பெயர்களையும் சொல்லி, வைகுண்ட ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும்.

    மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'வைகுண்ட ஏகாதசி' என்று பெயர்.

    ஏகாதசி அன்று அவல், வெல்லம் கலந்த நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், மதியம், இரவு பலகாரம் மட்டும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொழுது, இறை நாமத்தையே உச்சரிக்க வேண்டும்.

    பக்திப் பாடல்கள் பாடி வழிபடலாம். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னால் நீராடி தினம் பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.

    இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.

    நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்

    தஞ்சமென உனையடைந்தேன் தாமரைமேல் நிற்பவளே! அஞ்சாது வரம்கொடுக்கும்

    அழகுமகா லட்சுமியே வஞ்சமில்லா தெமக்கருள வருவாய் இதுசமயம்!

    -என்று பாடுங்கள். எட்டுவகை லட்சுமியும் வேண்டும் அளவிற்குச் செல்வமும், வெற்றி வாய்ப்பும் உங்களுக்கு வழங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    Next Story
    ×