என் மலர்
வழிபாடு

திருப்பதி கோவிலில் வசந்தோற்சவம் நிறைவடைந்தது
- மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் 3 நாட்கள் நடந்தன. முதல் நாள் மற்றும் 2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம், வசந்த உற்சவ ஆஸ்தானம் நடந்தது.
3-வது நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர் சமேத ஆஞ்சநேயர், ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து வெளியே வந்து நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக சென்று வசந்த மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு உற்சவர்களுக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்டவையால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நெய் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. நிறைவாக வசந்தோற்சவ ஆஸ்தானம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். இத்துடன் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.
வசந்தோற்சவத்தில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.






