search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தர்ப்பணம் செய்வது ஏன்?
    X

    தர்ப்பணம் செய்வது ஏன்?

    • பித்ருக்களின் ஆசி இருந்தாலே வீட்டில் செல்வ வளமும், சந்தோஷமும் கூடும்.
    • எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.

    குடும்பத்தில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ நம் முன்னோர்கள் ஆசி தேவை. பித்ருக்களின் ஆசி இருந்தாலே வீட்டில் செல்வ வளமும், சந்தோஷமும் கூடும்.

    தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். நம் முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டிய நாள். ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை நினைத்து வணங்கும் நாள்.

    இன்றைய தினம் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

    எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம்' என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ' என்று பொருள். விஷ்ணுவில் இருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாக கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமாம்.

    பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்கள் உள்ளன. அவை உத்தராயன புண்ணிய காலம் என்று சொல்லும் காலத்தின் தொடக்கமான தை மாதம் முதல்நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகிய நாட்கள் சிராத்தம் கொடுப்பதற்குப் பிரத்தியேகமான நாட்களாகும்.

    அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள்.

    சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையில் இருந்து விடுபட்டு வளர்பிறைக்கு செல்லும் நாள். ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய் சந்திரன் தந்தை சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

    சந்திரன் சந்தோஷமடைந்தால் மனதும் சந்தோஷம் அடையும். சந்தோஷமான மனதுடன் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நல்லபடியாக வெற்றி பெறும். அமாவாசை நாளில்தான் சந்திரன் சந்தோஷம் அடைகிறாராம்.

    சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பித்ருக்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் பித்ரு தர்ப்பணத்துக்கு உரிய நாளாக கூறியிருக்கிறார்கள்.

    நாம் செய்யக் கூடியதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாக செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு.

    தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாரும் இல்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

    Next Story
    ×