என் மலர்
உடற்பயிற்சி

தொடைகளை வலுப்படுத்தும் மாலாசனம்

- கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
- இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
வடமொழியில் 'மாலா' என்றால் மாலை, 'நமஸ்காரம்' என்றால் வணக்கம். அதாவது இந்த ஆசனத்தை செய்யும் போது உடல் மாலை வடிவில் இருப்பதால் மாலாசனம் என்றும் இதில் வணக்கம் சொல்வதால் நமஸ்காராசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Garland Pose மற்றும் Squat Pose என்றும் அழைக்கப்படுகிறது.
மாலாசனம் அடி முதுகு, இடுப்பு தொடங்கி பாதம் வரை நீட்சியடைய (stretch) வைக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தும் ஆசனமான இது தியானத்திற்கு மிகவும் ஏற்றதாகும். இது மனதை அமைதிப்படுத்துவதுடன், கவனத்தை ஒருமுகப்படுத்தும் வலிமையும் கொண்டது.
பலன்கள்
இடுப்பை வலுப்படுத்துவதுடன் இடுப்பின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. தொடைகளை வலுப்படுத்துகிறது.
தொடர்ந்து பயிலும்போது சுகப்பிரசவம் ஆக உதவுகிறது. அடிவயிறு மற்றும் இடுப்புப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
செய்முறை
விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். கால்களுக்கு இடையில் சுமார் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்கவும். கால் முட்டியை மடித்து உட்காருவது போல் இடுப்பைத் தாழ்த்தவும். தொடைகளை விரிக்கவும். தொடைகளுக்கு இடையில் உங்களின் மேல் உடலை விட அதிக அகலத்தில் இடைவெளி இருக்க வேண்டும். மேலுடலைச் சற்று முன்புறமாகக் கொண்டு வரவும்.
கைகளை மடித்து இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லும் முறையில் சேர்த்து வைக்கவும். மேற்கைகள் தொடைகளின் உள்பக்கம் இருக்குமாறு வைக்கவும். பாதங்கள் தரையில் இருக்க வேண்டும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பயிற்சி செய்யச் செய்ய நேரத்தை அதிகரித்து ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தில் இருக்கவும்.
தீவிர அடி முதுகு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.