search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    கால்களை வலுப்படுத்த உதவும் விருக்ஷாசனம்
    X

    கால்களை வலுப்படுத்த உதவும் விருக்ஷாசனம்

    • ஆசனங்கள் செய்ய வயது வரம்பும் தடையல்ல.
    • இந்த ஆசனத்தை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

    நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனையே, மனதை ஒருநிலைப்படுத்துதல் தான். ஆசனங்களுள் ஒன்றான விருக்ஷாசனம் செய்தால், மனதை ஒருநிலைப்படுத்தி, நினைத்த காரியங்களை மிக சுலபமாக செய்ய முடியும். விருக்ஷாசனம் செய்ய, உடல் தசைகள், வளையும் தன்மையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

    ஆசனங்கள் செய்ய வயது வரம்பும் தடையல்ல. அதிகாலையிலோ, அல்லது மாலை நேரங்களிலோ இந்த ஆசனத்தை செய்யலாம். விருக்ஷாசனம் என்றால், மரம் போன்ற தோற்றம் என்று பொருள். இந்த ஆசனத்தை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். ஆசனங்களை கட்டாயப்படுத்தி செய்வதால், எந்த பயனையும் பெற முடியாது. அதேபோல், வெறும் தரையிலும் செய்யக்கூடாது.

    செய்முறை : வலது கால் முட்டியை மடக்கி, அதன் பாதங்களை, இடது காலின் தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். முதல் கட்ட பயிற்சியின்போது, போதுமான அளவு இடது கால் முட்டி, மடங்காத வகையில் செய்ய வேண்டும். பின், நன்கு பயின்ற பிறகு, முட்டி முழுவதுமாக மடங்காமல் செய்ய வேண்டும்.

    தொடர்ந்து, இரண்டு கைகளையும், தலைக்கு மேல் உயர்த்தி, கைகளை ஒன்றாக சேர்ந்து வணங்க வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். மூச்சை அடக்குவதோ, அல்லது வாய் வழியாக மூச்சு விடுவதோ கூடாது. இதேநிலையில், 20 முதல், 30 விநாடிகள் நிற்க வேண்டும். பின்னர் காலை மாற்றி செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை 3 முறை செய்யவேண்டும்.

    பயிற்சியின்போது, உடலின் மொத்த எடையும், ஒரு காலில் தாங்குவதால், கால் தசைகள் வலுப்பெறும். அதேபோல், சீராக மூச்சு விடுவதாலும், எடையை தாங்கும்போது இடுப்பு பகுதியில் வளைவு தன்மை அதிகரிப்பதாலும், நன்றாக பசி எடுக்கும். உரிய நேரத்தில் பசி எடுக்காமல், அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம்.

    உடல் எடையை தாங்குவது மட்டுமின்றி, சமநிலைப்படுத்தி பூமியின் புவி ஈர்ப்பு சக்திக்கு இணையாக, உடலை சமப்படுத்துவதால், மனம் ஒரு நிலைப்படும். இதனால், மனதும் அறிவும் ஒன்றுபட்டு செயல்பட முடியும். இந்த நிலையை நன்றாக பழகிய பின், கண்களை மூடி, இந்த ஆசனத்தில் நிற்க பயிற்சி எடுக்கலாம். ஆண், பெண் என இருபாலரும் இந்த ஆசனத்தை செய்யலாம்.

    கால்கள் வலுப்படுத்த உதவும். புஜங்கள் விரிவடையும். மனதை ஒரு நிலைப்படுத்தமுடியும். முதுகில் நெகிழ்வுத்தன்மை உண்டாகும். ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    Next Story
    ×