search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    குத்துப்பாட்டுக்கு ஆடினால் மன அழுத்தம் குறையும் - புது ஆய்வில் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குத்துப்பாட்டுக்கு ஆடினால் மன அழுத்தம் குறையும் - புது ஆய்வில் தகவல்

    • ஜிம்மிற்கு செல்ல தயங்குபவர்கள், வயதானவர்கள் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் போன்றவர்கள் நடனமாடுவதன் மூலம் பெரிதும் பயனடையலாம்.
    • நடனம் மனஅழுத்தத்தை குறைத்து நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவுகிறது.

    ஒரே டென்ஷன்...

    இது பல இடங்களில் நம் காதுகளில் வந்து விழும் வார்த்தை சில நேரங்களில் நாம் கூட இந்த வார்த்தையை சொல்லக் கூடும்.

    ஏன் இப்படி....? எத்தனை பிரச்சனையை சமாளிப்பது? காலையில் கண்விழித்து எழுந்தது முதல் இரவு வீட்டில் தூங்க செல்வது வரை தொடர்ந்து துரத்தும் பிரச்சனைகள்... ஒவ்வொன்றையும் சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

    இதனாலேயே மனஅழுத்தம், எரிச்சல், கோபம் எல்லாம் வந்து விடுகிறது. சந்தோசமான சூழ்நிலையை அனுபவிக்கவே முடியவில்லையே! சே... என்னடா வாழ்க்கை இது... என்று ஒவ்வொரு நாளும் புலம்ப வைத்து விடுகிறது.

    இதில் இருந்து விடுபட குத்தாட்டம் போடுங்கள் என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சிகளை செய்வது கடினமாக இருக்கும். இத்தகைய நேரங்களில் கொஞ்ச நேரம் உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு ஒரு ஆட்டத்தை போட்டால் போதுமாம். உடலே உற்சாகமாகிவிடுமாம்.

    நடனம் ஆடுவது உடற்பயிற்சியின் மகிழ்ச்சிகரமான வடிவம், நல்ல உடல், நல்ல மனநிலையை தருவதோடு கூர்மையான மூளையையும் அளிக்கிறதாம். நடனம் என்பது முழு உடல் பயிற்சி. இது உடல் மற்றும் மன நலனுக்கான நன்மைகளை தருகிறது. மேலும் எல்லா வயதினருக்கும் ஏற்றது. ஆடுவது எல்லோருக்கும் சந்தோசம் தானே!

    ஜிம்மிற்கு செல்ல தயங்குபவர்கள், வயதானவர்கள் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் போன்றவர்கள் நடனமாடுவதன் மூலம் பெரிதும் பயனடையலாம்.

    வழக்கமான நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளைப் போல் இல்லாமல் நடனத்திற்கு அதிக மூளை சக்தி தேவைப்படுகிறது. நடனமாடும்போது உடலை மட்டும் அசைப்பதில்லை. மூளைக்கும் சேர்த்து உடற்பயிற்சி செய்கிறோம். நடனம் ஆடுவதற்கு ஒருங்கிணைந்த உணர்வு மற்றும் சமநிலை தேவைப்படுகிறது. மூளையில் புதிய இணைப்புகளை உருவாக்க உதவுகிறது என்று குருகிராமில் உள்ள ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குனர் டாக்டர் ஆதித்யா குப்தா கூறியுள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் அறிவாற்றல் விஞ்ஞானி ஹெலினா புளூமென் கூறும்போது, இறுக்கமான மனநிலையில் இருக்கும் போது நடனம் ஆடினால் மூளையின் பல்வேறு பகுதிகளும் ஈர்க்கப்பட்டு மனநிலை இலகுவாகிவிடும் என்கிறார்.

    நினைவாற்றலுக்கான சிறந்த பயிற்சியாக நடனம் இருக்கிறது. பாடலுக்கு ஏற்ப கை, கால்களை அசைத்து ஆடும்போது உணர்வை ஒருங்கிணைத்து ஆட்டத்தில் கவனம் செல்கிறது. இவை நியூரோ பிளாஸ்டிக் சிட்டியை தூண்டி அறிவாற்றல் வீழ்ச்சியை குறைக்கிறது. மூளையை கூர்மையாக்குவதாகவும் டாக்டர் ஆதித்யகுப்தா குறிப்பிட்டு உள்ளார்.

    பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் நடனம் ஒரு சிறந்த சிகிச்சையாக இருப்பதாக டாக்டர் பிரவீன் குப்தா கூறுகிறார். ஏனெனில் இது காட்சி மற்றும் செவிவழி குறிப்புகளை பயன்படுத்தி மனதின் சமநிலையை மேம்படுத்துகிறது.


    2018-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நடனம் ஆடி பயிற்சி செய்பவர்கள் மூளைப் பகுதிகளில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் அதிக வளர்ச்சியை கண்டனர். அவை நினைவாற்றல், கவனம் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற சிந்தனை திறன்களைக் கையாளுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    நடனம் மனஅழுத்தத்தை குறைத்து நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவுகிறது. அறிவாற்றல் திறன் அதிகரிக்கிறது.

    ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க நடனம் சிறந்த வழி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். வழக்கமான நடனம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது, தசை வலிமையை உருவாக்குகிறது மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிக்கிறது.

    நடனமாடும்போது, உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது. நடனம் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் துடிக்க உதவுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது, "என்கிறார் நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சைபல் சக்ரவர்த்தி.

    ஒரு ஆய்வின்படி, மிதமான-தீவிர நடனம், நடைபயிற்சியை விட அதிக அளவில் இருதய நோய் இறப்புக்கான அபாயத்தைக் குறைப்பதாக தெரியவந்துள்ளது. நுரையீரலை சிறப்பாக செயல்பட வைக்கிறது. நடனம் உங்கள் சுவாச அமைப்புக்கும் நல்லது. எளிதாக சுவாசிப்பதன் மூலம் அதிக ஆற்றல் பெற முடியும் என்கிறார்கள்.

    நடனம் ஆடும்போது தசைகள் வலிமை பெறுகிறது. உடலில் இருந்து கூடுதல் கலோரிகளை எரிக்கிறது என்ற ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

    நடனம் என்றவுடன் முறைப்படி கற்றுக் கொண்டு ஆட வேண்டும் என்பதில்லையாம். உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு உங்கள் விருப்பம் போல் ஆடலாம்.

    பல வெளிநாடுகளில் உடற்பயிற்சி கூடங்களில் எல்லா வயதினரும் இப்படி குத்தாட்டம் போடுவது அதிகரித்துள்ளது. அது மனதை எளிதாக்குவதாக கூறி சந்தோசப்படுகிறார்கள்.

    எங்கே... நீங்களும் ரெடியா? டென்ஷனை நினைத்து 'வொரி' பண்ணாதீங்க... செல்போனில் பிடித்த பாடலை போடுங்கள். அதை கேட்டு ஒரு ஆட்டத்தை போடுங்க.... எல்லா டென்ஷனும் போயிடும்.

    Next Story
    ×