search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • பூண்டு பொடியை சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும்.
    • சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

    சூடான இட்லி அல்லது தோசையுடன் காரமான பூண்டு பொடியை வைத்து சாப்பிடுவதற்கு யாருக்கு தான் பிடிக்காது? ஹோட்டல்களிலும், சாலையோர ரோட்டு கடைகளிலும் இந்த பூண்டு பொடியை சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும்.

    இதை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் என பலரும் நினைத்தாலும் அதை முறையாக எப்படி செய்வது என்று குழப்பம் இருக்கும். அப்படி, நாம் சாப்பிட்டு மனதிற்கும் நாவிற்கு பிடித்துப்போன ஆந்திரா ஸ்டைல் பூண்டு பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - 1 கப்

    உளுத்தம் பருப்பு - அரை கப்

    பயட்கி மிளகாய் (byadgi chilli) - 8

    காய்ந்த மிளகாய் - 8

    எள் - 2 தேக்கரண்டி

    பொட்டுக் கடலை - 3 டேபிள் ஸ்பூன்

    கறிவேப்பிலை - 2 கொத்து

    பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

    பூண்டு பல் - 12



    செய்முறை:

    முதலில் அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு கடாயில் கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக வறுக்கவும்,

    பின்னர், இந்த பருப்பை ஒரு தட்டில் மாற்றி வைத்து, அதே கடாயில் உளுந்தப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்,

    உளுந்தம்பருப்பு வறுப்பட்டதும், அதே தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் நாம் தயார் செய்யும் பொடிக்கு பருப்பு வகைகளை தனித்தனியாக வறுத்து எடுத்தால் கூடுதல் சுவை தரும்.

    இப்போது அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில், பயட்கி மற்றும் காய்ந்த மிளகாய்யை சேர்த்து வதக்கவும். பயட்கி மிளகாய் இல்லை என்றால் 15 காய்ந்த மிளகாயை வதக்கவும்.

    மிளகாய் நன்கு வதங்கியதும் எள் சேர்க்க வேண்டும். இப்போது எள் வெடிக்கத் துவங்கியதும் பொட்டு கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதில், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

    நாம் வறுத்து வைத்தவை நன்கு ஆறிய பின்னர், மிக்சி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இப்போது சுவையான ஆந்திர ஸ்டைல் பூண்டு இட்லி பொடி தயார்.

    இட்லி பொடியை இப்படி செய்வதால் குறைந்தது இரண்டு மாதங்கள் வரை சேமிக்கலாம்

    சூடான இட்லி, பொடியுடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.



    • பாசிப்பருப்பை களைந்து வேக வைக்கவும்.
    • அரிசி மாவில், வெந்த பாசிப்பருப்பு, பாகு, ஏலக்காய்த் தூள் போட்டு பணியார மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி 1/2 கிலோ

    பாசிப்பருப்பு 1/2 கப்

    வெல்லம் 1/4 கிலோ

    ஏலக்காய்த் தூள் 1/2 ஸ்பூன்

    எண்ணெய் தேவைக்கேற்ப

    செய்முறை:

    பச்சரிசியை களைந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து விட்டு, நிழலில் உலர வைத்து மாவாக்கிக் கொள்ளவும்.

    பாசிப்பருப்பை களைந்து வேக வைக்கவும். கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். அதை கம்பி பாகு பதத்தில் காய்ச்சி இறக்கி வைக்கவும்.

    அரிசி மாவில், வெந்த பாசிப்பருப்பு, பாகு, ஏலக்காய்த் தூள் போட்டு பணியார மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும்.

    சுவையான இனிப்பு பாசிப்பருப்பு பணியாரம் தயார்.

    • ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.
    • தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * வெங்காய பக்கோடா செய்வதற்கு மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையை தூளாக்கி அதனை மாவுடன் சேர்க்கவும். அப்படி செய்தால் பக்கோடா மொறு மொறுவென்றும், ருசியாகவும் இருக்கும்.

    * சப்பாத்தியை சுட்டெடுத்ததும் எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் சப்பாத்தியின் அடியில் வியர்த்து ஈரமாவது தடுக்கப்படும்.

    * தேங்காய்த் துருவல் மீதமானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதனை மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாடிப்போகாது.

    * கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்பு பலகாரங்களை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.

    * ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்றிருக்கும்.

    * தோசை மாவு, பொங்கல் தயாரிக்கும்போது சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாகவும் இருக்கும்.

    * சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக்கிளறி இறக்கினால் பொங்கல் சுவையாக இருக்கும்.

    * பாயசத்திற்கு உலர் திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை சிறிதாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

    • வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம்.
    • வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு.

    மூட்டுகளை முடக்கி வைக்கும் வாதநோயை அகற்றுவதால் இக்கீரைக்கு 'முடக்கறுத்தான்' (முடக்கு + அறுத்தான் எனப்பெயர் வந்தது. முடக்கு நோயை அகற்றும் தன்மை மிக்க இக்கீரை ஒரு கொடி வகையை சார்ந்தது. வேலிகளில் பற்றி செழிப்பாக படர்ந்து வளரும்.

    நாற்பது வயது கடந்த பலருக்கு மூட்டுகளில் நீர் கோர்த்து தாங்கமுடியாத வலி ஏற்படும். தோள்பட்டை வலி, முதுகு வலி, இடுப்பு வலி என பலவகையான வலிகளை நீக்கும் இயல்பு முடக்கறுத்தானுக்கு உண்டு.

    உடல்வலி, மூட்டுகளில் வீக்கம், உடல் கனத்து வலி தோன்றும் பொழுது, இரண்டு கைபிடி முடக்கறுத்தான் கீரையை 200 மி.லி. நீரில் இட்டு, ஒரு தேக்கரண்டி சீரகமும் கலந்து கொதிக்க வைத்து அருந்த உடல் வலி நீங்கும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வரலாம்.

    பெண்களுக்கு சூதகவலி, மற்றும் சூதக தடை, மாதவிடாய் சமயம் தோன்றும் வலிக்கு இரண்டு கைபிடி முடக்கறுத்தான் இலை, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் கலந்து 200 மிலி நீரில் கொதிக்க வைத்து அருந்த வயிறு மற்றும் தொடை, இடுப்பு பக்கங்களில் உண்டாகும் வலி நீங்கும். தோல் நோய்களுக்கு முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம்.

    முடக்கறுத்தான் கீரை சாப்பிடும் பொழுது சிலருக்கு பேதி உண்டாகும். அதனால் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு விடுமுறை நாளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    முடக்கறுத்தான் இலை- 2 கை பிடி அளவு

    பூண்டு- 5 பல் அரைப்பதற்கு

    துவரம் பருப்பு- 1 ஸ்பூன்

    மிளகு- ½ ஸ்பூன்

    சீரகம்- 1 ஸ்பூன்

    (மேற்கண்ட துவரம் பருப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்)

    காய்ந்த மிளகாய்- 2

    புளி- நெல்லிக்காய் அளவு (200 மி.லி. நீரில் கரைத்து கொள்ளவும்)

    தக்காளி-1 பொடிதாக அரிந்து கொள்ளவும்

    நெய்- 3 ஸ்பூன்

    கடுகு- 1 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து முடக்கறுத் தான் கீரை மற்றும் பூண்டை ஒரு தேக்கரண்டி நெய் இட்டு லேசாக வதக்கி சற்று ஆறிய பின் அரைத்து வைத்துக் கொள்ளவும். புளி தண்ணீரை தக்காளி கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

    நன்கு கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள பொடியை கலந்து கொதிக்க விடவும்.

    இறுதியாக அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் பூண்டு கலவையை இட்டு கொதிக்க வைத்து, ஒரு தேக்கரண்டி நெய்யில் சிறிது கடுகு தாளித்து இறக்கி கொள்ளவும்.

    இதை சூப்பாகவும், சூடான சாதத்துடன் கலந்து ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். வயிற்று உப்புசம், மலச்சிக்கல், மூட்டுவலி, அடிவயிற்று வலிக்கு இந்த ரசம் செய்து பயன்படுத்தலாம். மூல நோய் வள்ளவர்களுக்கு தொடைப்பகுதியில் வலி ஏற்படும். அப்பொழுது இந்த ரசம் 100 மி.லி. சாப்பிட வலி குறையும்.

    • முருங்கை கீரை சிறந்த 'ஆண்டி ஆக்ஸிடண்ட்' ஆக செயல்படுகிறது.
    • மலச்சிக்கல் நீக்க உதவுகின்றது.

    முருங்கை கீரையை 'கீரைகளின் ராணி' என கூறினால் அது மிகையாகாது. முருங்கை கீரையில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.


    இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் சத்துக்கள். மற்றும் ஏராளமான நுண்ணிய சத்துக்கள் முருங்கையில் நிறைந் துள்ளது. இதில் 96 வகையான சத்துகளும், 46 வகையான ஆண்டி ஆக்ஸிடண்ட்களும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    இதில் இரும்புச்சத்து இருப்பதால் 'அனீமியா' எனப்படும் ரத்த சோகைக்கு மிக சிறந்த உணவாகின்றது. ஏராளமான வைட்டமின் சத்துக்கள் கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை உறுதி கொள்ள செய்கின்றது.

    முருங்கை கீரை சிறந்த 'ஆண்டி ஆக்ஸிடண்ட்' ஆக செயல்படுகிறது. இளமையாக இருக்க உதவுகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்க உதவும், தாதுபலம் பெருகும், தூக்கமின்மை நீங்கும். மலச்சிக்கல் நீக்க உதவுகின்றது.

    தேவையான பொருட்கள்:

    முருங்கை பூ- 200 கிராம் (காம்பு நீக்கி பொடிதாக அரிந்து கொள்ளவும்).

    கடலைபருப்பு- 100 கிராம்

    துவரம் பருப்பு- 50 கிராம்

    உளுந்தம் பருப்பு- 50 கிராம் (இரண்டையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்

    பெரிய வெங்காயம்- 2 (பொடிதாக அரிந்து கொள்ளவும்)

    பச்சை மிளகாய்- 4

    உப்பு- சுவைக்கேற்ப

    நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப


    செய்முறை:

    கடலை பருப்பு மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் நீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். ஊற வைத்த பருப்புகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    முருங்கைப் பூ, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையில் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து மாவை வடைகளாக தட்டி, பொரித்தெடுக்கவும். 

    • கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.
    • மணத்தக்காளி காய், வாந்தியைப் போக்கும்.

    மணத்தக்காளி, தானாகவே தோட்டங்களில் வளரும் ஒரு கைச் செடி, இதன் இலை மற்றும் காய் மருத்துவக் குணம் வாய்ந்தது. மணத்தக்காளியின் பழம் கறுப்பாக மிளகு போல் இருப்பதால் இதனை 'மிளகு தக்காளி' என்றும் கூறுவர்.

    இந்த கீரையில் ரிபோபிளோவின், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புத் தாதுக்களும் உள்ளன.


    மணத்தக்காளி வாய்ப்புண்ணை தீர்க்கக் கூடியது. வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த கீரையை ஒரு கைபிடி அளவு நன்றாக மென்று சாப்பிடலாம்.

    இதை உணவிலும் தினம் சமைத்து உண்ணலாம். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும், மலமிளக்கும் தன்மையும் இந்த கீரைக்கு உண்டு.

    இதன் இலையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள், வயிற்றில் உள்ள கட்டிகளைக் கரைக்க உதவுகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.

    மணத்தக்காளி காய், வாந்தியைப் போக்கும். இதை உணவில் அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    மணத்தக்காளி கீரை- 100 கிராம்

    சின்னவெங்காயம்- 20

    தேங்காய்- 1/2 மூடி

    அரிசி கழுவிய நீர்- 200 கிராம்

    சீரகம்- 1 ஸ்பூன்

    நெய்- 1 ஸ்பூன்

    உப்பு- சுவைக்கேற்ப


    செய்முறை:

    மணத்தக்காளி கீரை மற்றும் சின்ன வெங்காயத்தை பொடிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் கீரை மற்றும் சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காயைத் துருவி அரைத்து பாலெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேகவைத்த கீரையில் அரிசி கழுவிய நீர் மற்றும் உப்பு கலந்து ஒரு கொதி வந்ததும், தேங்காய்ப் பால் கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும். நெய்யில் சீரகத்தை தாளித்து கலந்துகொள்ளவும்.

    (அரிசி கழுவிய நீரில் வைட்டமின் 'பி' சத்து உள்ளதால் இது வாய்ப் புண் விரைவில் ஆற உதவுகிறது. வாய்ப் புண், வயிற்றுப்புண் மற்றும் வயிற்றில் கட்டியுள்ளவர்கள் இந்த சூப்பை அடிக்கடி தயாரித்து சாப்பிடலாம்.

    • எலும்புகளுக்கு நல்ல உறுதி அளிக்கக் கூடியது.
    • 'ஆஸ்டியோபிளாஸ்ட்' என்ற எலும்பு செல்களை உற்பத்தி செய்வதற்கு உதவி புரிகிறது.

    சாதாரணமாக தரிசு நிலங்களில் படர்ந்து கிடக்கும் பிரண்டை ஒரு கொடி வகையைச் சார்ந்தது. சதைப்பற்றுள்ள நாற் கோண வடிவுடன் இருக்கும். காரத்தன்மை உள்ளது. இதற்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.

    முக்கியமாக, எலும்புகளுக்கு நல்ல உறுதி அளிக்கக் கூடியது. அதனால் இதற்கு 'வச்சிரவல்லி' என்ற வேறு பெயரும் உண்டு.


    பிரண்டை எலும்பு மஜ்ஜை யில் 'ஆஸ்டியோபிளாஸ்ட்' என்ற எலும்பு செல்களை உற்பத்தி செய்வதற்கு உதவி புரிகிறது. எலும்புக்கு அடர்த்தியையும், உறுதியையும் அளிக்கிறது.

    பிரண்டையில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் கரோட் டினின் போன்ற சத்துகள் உள்ளன. இதில் உள்ள அனபாலிக் ஸ்பூராய்டு (இயற்கையான தாவர ஊக்கி) தசைகளில் வலி, வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

    பெண்களுக்கு நாற்பது வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் சமயம் ஈஸ்டிரோஜன் ஹார்மோன் குறைபாடு காரணமாகத் தோன்றும் சூதகத் தடை, வயிற்று உப்புசம், அதிக உதிரப்போக்கு, முக்கியமாக எலும்பின் உறுதி குறைவதால் தோன்றும் மூட்டுவலி, அடர்த்தி குறைவதால் தோன்றும் எலும்பு தேய்மானம், முதுகு, இடுப்பு வலி, முதுகுத் தண்டுவட தேய்மானத்துக்கு பிரண்டை மிகச் சிறந்த மருந்து.

    தேவையான பொருட்கள்

    பிரண்டை (தோல் சீவிய துண்டுகள்)- 100 கிராம்

    உரித்த பூண்டு பற்கள்- 50 கிராம்

    மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி

    கடுகு- 1 தேக்கரண்டி

    வெந்தயம் - 1 தேக்கரண்டி

    புளி- எலுமிச்சை அளவு

    உப்பு- சுவைக்கேற்ப

    நல்லெண்ணெய்- 50 மி.லி.


    செய்முறை:

    ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து அதில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டைத் துண்டுகள், புளி மற்றும் பூண்டை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடுகு மற்றும் வெந்தயத்தை வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு வதக்கி வைத்துள்ள பிரண்டை மற்றும் பூண்டினை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் வதக்கிய பிரண்டை மற்றும் மிளகாய் தூள், வறுத்து பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி பின்னர் ஆற வைத்து பறிமாறலாம். ஈரமில்லாத பாட்டிலில் எடுத்துக் வைத்துக்கொண்டு பயன் படுத்தலாம். பல மாதங்களுக்கு கெட்டுப்போகாது.

    வல்லாரை வெல்ல வேண்டும் எனில் வல்லாரை உண்டுவா' என்பது பழமொழி. வல்லாரை, நினைவாற்றலை பெருக்கும், மூளை நரம்புகளை வலுப்படுத்தும். பதற்றத்தை குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தும் தன்மையுடையதால் `சரஸ்வதி' என தெய்வீகமாக இதனை அழைத்தனர் நம் முன்னோர்.

    வல்லாரை ஒரு காயகற்ப மூலிகை. இதை மருந்தாக பயன்படுத்தும் பொழுது எல்லா பிணிகளும் உடம்பை விட்டு அகலும் என சித்த மருத்துவ பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.

    வல்லாரை, தோலுக்கு நல்ல பொலிவை ஏற்படுத்துகின்றது. வயதாவதால் தோலில் ஏற்படும் சுருக்கம், கண்களுக்கு அடியில், மற்றும் முகத் தில் ஏற்படும் மெல்லிய கோடுகளை நீக்க வல்லது. காயம்பட்ட தழும்புகள், தீப் புண்களால் ஏற்படும் 'கீலாய்டு' என்ற தழும்புகள், குழந்தை பிறப்பிற்கு பின் வயிற்றில் ஏற்படும் கோடுகள் போன்றவற்றிக்கு வல்லாரை இலையை அரைத்து பூசலாம்.

    ரத்தத்தை தூய்மைபடுத்தும். உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். வாய் புண், தொண்டைப்புண் மற்றும் வயிற்று புண்களை ஆற்றும்.

    தேவையான பொருட்கள்:

    வல்லாரை கீரை- 100 கிராம்

    பால்- 14 லிட்டர்

    தேங்காய்- 1/2 மூடி (துருவிக் கொள்ளவும்)

    பச்சரிசி- 1 தேக்கரண்டி (ஊறவைத்துக் கொள்ளவும்)

    பாதாம் பருப்பு- 5

    வெல்லம்- 100 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)

    ஏலக்காய்- 5 (பொடி செய்து கொள்ளவும்)


    செய்முறை:

    வல்லாரை கீரை, தேங்காய் துருவல், பச்சரிசி, பாதாம் பருப்பு ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பாலை அடுப்பில் வைத்து காய்ச்சிக் கொள்ள வேண்டும். பின்னர் வெல்லத்தை அடி கனமான பாத்திரத்தில் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.

    அதில் அரைத்து வைத்துள்ள வல்லாரை கீரை கலவையை கலந்து சிறுதீயில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் தீயை அணைத்து சிறிது ஆறிய பின் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் தூள் கலந்து பரிமாறலாம். சுவையான வல்லாரை பாயாசம் தயார்.

    இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். கலர்புல்லாக இருக்கும். 

    • உடல் வறட்சியை நீக்கி சிறுநீரை பெருக்கும் குணம் உண்டு.
    • சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

    வெந்தய கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்க கூடியது. வெந்தய கீரையில் சுண்ணாம்பு சத்து, புரதம், வைட்டமின் ஏ.பி.சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை தந்து, வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் இந்த கீரை மலச்சிக்கலையும் போக்கும்.

    உடல் வறட்சியை நீக்கி சிறுநீரை பெருக்கும் குணமும் இதற்கு இருக்கிறது. ஜீரணத்தை சரிசெய்யவும், உடலில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தவும் இதனால் முடியும்.

    இளம் பெண்களுக்கு உடல்சூடு காரணமாக தலையில் பொடுகு மற்றும் முடி உதிர்தல் ஏற்படும். இதற்கு உணவில் வெந்தய கீரையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வெந்தய கீரை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். தாதுகளுக்கு பலத்தை கொடுக்கும். இந்த கீரை சற்று கசப்பான ருசியை தந்தாலும், உணவு பதார்த்தங்களில் கலக்கும் போது விரும்பி சாப்பிடும் அளவிற்கு சிறந்த ருசியையும், மணத் தையும் கொடுக்கும்.

    தேவையான பொருட்கள்:

    வெந்தயகீரை- 1 கட்டு (சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்)

    கோதுமை மாவு- 100 கிராம்

    கடலை மாவு- 100 கிராம்

    பச்சைமிளகாய் 2

    இஞ்சி- சிறுதுண்டு

    மஞ்சள்தூள்- 1/ 2 தேக்கரண்டி

    மிளகாய்தூள்- 1/ 2 தேக்கரண்டி

    உப்பு-தேவைக்கு

    சர்க்கரை- 1 தேக்கரண்டி

    தயிர்- 3 தேக்கரண்டி

    நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி

    தாளிக்க:

    கடுகு-1 தேக்கரண்டி

    நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி

    தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி


    செய்முறை:

    பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தய கீரை, தயிர், உப்பு, எண்ணெய், எலுமிச்சை சாறு, சர்க்கரை போன்ற கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

    இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து இந்த கலவையில் சேர்க்க வேண்டும். சிறிது நீர்விட்டு நன்கு பிசைந்து, நீன்கள் விரும்பும் கட்லெட் வடிவத்தில் தயார் செய்யலாம். அதனை இட்டிலிதட்டில் வைத்து வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து கலக்க வேண்டும். வேகவைத்து எடுத்துள்ள கட்லெட்களை அதில் போட்டு சிறு தீயில் லேசாக கிளறி எடுக்கலாம்.

    மேலும் இதனை குழந்தைகளுக்கு பிடித்தமான மாலை நேர உணவாக கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

    • கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தவிர்க்கலாம்.
    • தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க, இஞ்சியை சிறிதாக வெட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

    * முட்டை வறுவல் செய்யும்போது அசைவ வாசம் வராமல் இருக்க கொத்தமல்லியை நன்றாக கசக்கி தூவி கிளற வேண்டும். அப்போது வாசம் நீங்கிவிடும்.

    * சோள மாவில் பலகாரம் அல்லது சப்பாத்தி, பூரி செய்யும்போது சிறிதளவு ஓமம் சேர்த்தால் சுவையும் மணமும் கூடும்.

    * சமையல் அறையில் ஈக்கள் தொல்லை அதிகமாக இருந்தால், ஆங்காங்கே புதினா இலைகளை கசக்கி போட்டு விட்டால் ஈக்கள் ஓடோடி விடும்.

    * ரசத்தில் கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்ப்பதற்கு பதில் கொஞ்சம் முருங்கைக்கீரையை நெய்யில் பொரித்து சேர்த்தால் ரசத்தின் சுவையும், மணமும் கூடுவதோடு சத்தும் அதிகமாகும்.

    * கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தவிர்க்கலாம்.

    * தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க, இஞ்சியை சிறிதாக வெட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

    * தோசை வார்க்கும் முன்பு, கல்லில் கொஞ்சம் பெருங்காயத்தைப் போட்டு, அதன் மீது எண்ணெய் ஊற்றி கல் முழுவதும் தேய்த்து விடுங்கள். பிறகு தோசை வார்த்துப் பாருங்கள். சூப்பராக எடுக்க வருவதுடன், தோசையும் மணக்கும்.

    • கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது.
    • நுரையீரல் நன்கு சுருங்கி, விரியவும் உதவி செய்யும்.

    ஆடாதொடா எல்லாருடங்களிலும் எளிதாக வளரக்கூடிய செடி. பல்வேறு செடிகளை தின்னும் ஆடுகள், இதை தொட்டுக்கூட பார்க்காது. ஆடு தொடாது என்பதால் இதற்கு ஆடாதொடா என்று பெயர். ஆனால் இதனை பெரும்பாலானவர்கள் 'ஆடாதொடை' என்று அழைப்பார்கள். இந்த செடி ஈட்டி வடிவ இலைகளை கொண்டிருக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும்.


    ஆடாதொடா கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது. குரலை மெருகேற்றுகிறது. அதனால் 'ஆடாதொடா இலையும், ஐந்து மிளகும் பாடாத வாய் எல்லாம் பாடும்' என்ற முதுமொழி உருவாகி விட்டது.

    இதன் இலை கசப்பு தன்மையுடையது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் அது நுரையீரலின் நுண்ணிய காற்றறைகளில் சிக்கி இருக்கும் கபத்தைக்கூட வெளியேற்றிவிடும். நுரையீரல் நன்கு சுருங்கி, விரியவும் உதவி செய்யும்.

    நீடித்த இருமல், நுரையீரலில் கபம் சேர்வதால் உண்டாகும் இருமல், தொண்டைகட்டு, கிருமி தொற்றுக்களினால் உருவாகும் சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு ஆடாதொடா சிறந்த மருந்தாகும்.

    காச நோயாளிகள் இருமும்போது சளியில் ரத்தம் காணப்படும். அவர்களுக்கு உடல் சோர்வுற்று மூச்சிரைப்பு ஏற்பட்டு மாலை நேரங்களில் காய்ச்சலும் உண்டாகும்.

    இதற்கு பத்து ஆடாதொடா இலைகளை அரைத்து, ஆவியில் வேகவைத்து, சற்று ஆறிய பின்பு சாறு பிழிந்தெடுக்கவேண்டும். அதில் 10 மி.லி சாறு எடுத்து, 4 தேக்கரண்டி திப்பிலி பொடி கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.

    தேவையான பொருட்கள்

    ஆடாதொடா இலை- 500 கிராம்

    சர்க்கரை- 300 கிராம்

    சுக்கு- 5 கிராம்

    மிளகு- 5 கிராம்

    திப்பிலி- 5 கிராம்

    ஜாதிக்காய்- 5 கிராம்

    தண்ணீர்- 200 மி.லி


    செய்முறை:

    ஆடாதொடா இலையை அரைத்து சிறிது நீர் கலந்து சாறு பிழிந்து எடுக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு, சர்க்கரையை கொட்டி பாகு காய்ச்சவும். பதம் வருவதற்கு சற்று முன்பாகவே ஆடாதொடா சாற்றை சேர்த்து, சிறுதீயில் கம்பி பதம் வரும் வரை வைத்திருக்கவும்.

    பின்னர் சுக்கு, மிளகு, திப்பிலி, ஜாதிக்காய் போன்றவைகளை பொடித்து தூளாக்க வேண்டும். அதன்பிறகு தீயை அணைத்து விட்டு அந்த கலவையில் இந்த பொடிகளை சேர்க்க வேண்டும்.

    ஆறிய பின்னர் தேன் கலந்து ஈரப்பதம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுளலாம்.


    ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம். சளி, இருமல், மாதவிடாய் சமயம் உண்டாகும் அதிக ரத்த போக்கிற்கும் இது சிறந்த மருந்து.

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நீடித்த சளி, இருமல் தோன்றினால் இதை தினம் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுங்கள். அவர்கள் அந்த அவஸ்தையில் இருந்து விடுபட்டு விடுவார்கள்.

    • மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி இலை.
    • துத்தி இலையை வதக்கி மூலநோய் மீது கட்டி புண்கள் ஆறும்.

    மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கி கட்ட மூலநோய் கட்டி மற்றும் புண்கள் ஆறும்.

    நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலச்சிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து.


    இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.

    நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச் சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.

    துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    துத்திக் கீரை- 200 கிராம்

    சின்ன வெங்காயம்- 100 கிராம்

    வேகவைத்த துவரம்பருப்பு- 3 மேஜைக்கரண்டி

    மிளகு தூள்- அரை ஸ்பூன்

    சீரகம்- 1 தேக்கரண்டி

    நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி

    உப்பு- சுவைக்கேற்ப


    செய்முறை:

    துத்திக் கீரை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சிறியதாக அரிந்துகொள்ள வேண்டும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து, வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துத்திக் கீரையை போட்டு வதக்கி சற்று நீர் தெளித்துக் கீரையை வேக விடவேண்டும்.

    கீரை வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு, மிளகுத் தூள், உப்பு கலந்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    இந்த கீரையை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட, மூலநோய் குணமாகும். மூலத்தின் உண்டாகும் வலி நீங்கும், மலச்சிக்கல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும்.

    மூல நோயால் துன்பப்படுபவர்கள் இந்த கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சமையலில் பயன்படுத்தலாம்.

    ×