என் மலர்
அழகுக் குறிப்புகள்
அருமையான தோற்றம் தரும் சேலையும்... ஜாலி வேலைப்பாடும்...
- சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
- ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம்.
ஜாலி வேலைப்பாடு என்பது துணிகளில் துளைகளை உருவாக்கி,அந்தத் துளைகளைச் சுற்றி செய்யப்படும் நூல் வேலைக்கு ஒப்பான ஒரு நுட்பமான வேலைப்பாடாகும். துணிகளில் வெறும் துளைகளை மட்டும் உண்டாக்கி செய்யப்படும் வேலைப் பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்று சொல்லலாம்.துணியின் தொடர்ச்சியை சேதப்படுத்தாமல் ஒரு ஊசியால் வார்ப் மற்றும் நெசவு நூல்களை வெளியில் இழுத்து துளைகளை உருவாக்குவதை உள்ளடக்கியதே இந்த வேலைப்பாட்டின் சிறப்பாகும்.இதன் மூலம் எம்பிராய்டரி வேலைப்பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்பது புரிந்திருக்கும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிக்கன்காரி வேலைகளில் இந்த சிறப்பு வாய்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளில் மிகச்சிறந்த வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் ஜாலி என்பது ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி(டிரெலிஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.
தையல் மற்றும் எம்பிராய்டரி என்பது காலங்காலமாக முதலில் தேவையாகவும் பின்னர் ஒரு விலை போகும் பொருளாகவும் இருந்திருக்கின்றது.துணிகளை கற்கள் மற்றும் நூல்களால் அழகுபடுத்துவது, ஜமிக்கி வேலைப்பாடுகள் என பல்வேறு அலங்காரங்கள் இருந்தாலும் இந்த ஜாலி வேலைப்பாடு என்பது சற்று வித்தியாசமான அதிநவீன வேலைப் பாடாக இருந்ததால் மக்களிடையே பிரபலமானது.
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான், துருக்கிய கட்டிடக்கலையில் சிறப்பு ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.பரந்த திறந்த வடிவமைப்புகளும், ஜாலியின் காட்சி விளைவுகளும், அதாவது கான்கிரீட்டில் உள்ள லேட்டிஸ் திரைகளும் அவரைக் கவர்ந்தன. ஜாலி அல்லது லேட்டிஸ் திரைகளை கான்கிரீட்டில் பிரதி செய்ய வேண்டும் என்ற ஆசைதான் சிக்கன்காரியில் இந்த நுட்பத்தை உருவாக்க தூண்டியது.முகலாய கட்டிடக்கலையில், அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் போன்றவற்றில் இந்த லேட்டீஸ் திரைகள் போன்ற அமைப்புகள் முகலாயர்களுக்கு ஒரு அடையாளமாக மாறியது
வேலைப்பாடு
சுமார் 40 தையல்கள் உள்ள இந்த சிக்கன் காரி வேலைப்பாட்டில் ஒருவகையான தையலில் நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் தங்கள் ஆடைகளில் மட்டுமே வேலைப்பாடுகளை செய்துகொள்வது இதன் சிறப்பம்சமாகும்.. இந்த ஆடைகளில் விடுபட்ட இடங்களை நிரப்பும் கைவினைஞர்களால் துணிகளில் ஜாலிகளை உருவாக்க முடியாது.. ஜாலிகளை உருவாக்குவதற்கென்றே நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மட்டுமே இதுபோன்ற ஜாலிகளை உருவாக்க முடியும்.
'அசெம்பிளி லைன்' எனப்படும் எம்பிராய்டரி வேலைப் பாட்டின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. வார்ப் மூலம் துணியின் மீது ஜாலியை உருவாக்கும் வேலை செய்யப்படுகிறது..ஒரு ஊசியால் நெசவு நூல்களைப் பிரித்து இறுக்குவதன் மூலம் துணியில் வலை போன்ற தோற்றமானது உருவாகின்றது.இது துணியின் வலிமையை சமரசம் செய்யாமல் வழக்கமான சுற்றளவுடன் துளைகளை உருவாக்குகிறது. துளைகளுடன் உருவாக்கப்பட்ட துணியை நிரப்ப கைவினைஞர்கள் அந்த வலையைச் சுற்றி வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.
பாணி மற்றும் வகை
நெட்டட் துணிகளை தயாரிக்கும் வேலையைப் போன்றதே இந்த ஜாலியை உருவாக்கும் விளைவு என்று சொல்லலாம். இது ஆடையை மிகவும் நேர்த்தியாகவும் எடை குறைந்ததாகவும் மாற்ற உதவுகிறது. ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாக இருந்தாலும், இதுபோன்ற பல நுட்பத்துடன் கூடிய வேலைப்பாடுகளை அது தன்னகத்தே கொண்டுள்ளது.
ஹத்கதி மற்றும் பேங்க் ஜெயில் என்று அழைக்கப்படும் இரண்டு நேரான ஜாலி தையல்கள் இந்த வேலைப்பாட்டில் பயன்படுத்தப் படுகின்றன.புள்புள் சாஷ்ம், மக்ரா, மந்த்ராஸி, பூல் ஜாலி, சிதாவுல் ஜாலி மற்றும் தாஜ்மஹால் ஆகியவை பொதுவாகக் காணப்படும் பிற ஜாலி தையல்கள் ஆகும்.சிக்கன்காரி ஆடைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மோட்ஃப்கள் பூக்கள், கொடிகள், இலைகள் மற்றும் புட்டிஸ். இதற்குள் ஜாலிகள் உருவாக்கப்படுகின்றன.
இன்றைய சூழ்நிலை
உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட எம்பிராய்டரி வடிவங்களில் ஒன்று என்று சிக்கன்காரி ஆடைகளைச் சொல்லலாம்..உலக அளவில் போற்றப்படும் சில சிறந்த இந்திய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டஇந்த ஜாலி வேலைப்பாட்டுடன் கூடிய சிக்கன்காரி உடைகளை அணிந்து ஆடவரும், பெண்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள். இருப்பினும் சிக்கன் காரி கலையை கற்றுக்கொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருகிறது.
ஜாலிஸை உருவாக்கும் நுட்பம் உலகம் முழுவதும் பலரால் கவனிக்கப்படுகிறது. பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட பல வடிவமைப்பாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த வகை எம்பிராய்டரியை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால்,சிக்கன்காரி ஆடைகளின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.
பராமரிப்பு
ஜாலி உருவாக்கப்படும் விதத்தால் துணியானது எந்தவித சமரசமும் இல்லாமல் முன்பு எப்படி வலிமையாக இருந்ததோ அதேபோன்ற வலிமையுடன் ஜாலி உருவாக்கப்பட்ட பின்பும் இருக்கின்றது.இதனால் இந்த ஆடையை பராமரிப்பது என்பது எளிதாகிறது.வழக்கமான சலவை மற்றும் இஸ்திரி நுட்பங்கள் ஜாலி வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளுக்கு ஏற்றவையாக இருக்கின்றது.மற்ற சாதாரண துணிகளுக்கு செய்யும் பராமரிப்பு போன்ற பராமரிப்பை இந்த துணிகளுக்கும் வழங்கலாம்.
ஜாலியில் உள்ள துளைகள் கைவினைஞர்கள் விரும்பும் நீளம் மற்றும் அகலத்தில் இருப்பது போன்று உருவாக்கப்படுகின்றது. அது பொதுவாக அவர்களுடைய படைப்புப் பார்வையைப் பொறுத்தது.
ஜாலியை முடிக்க, அது உருவாக்கப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு அவுட்டர் லைனிங் இருக்க வேண்டும்.ஒரு ஜாலி எப்போதுமே ஏதாவது ஒரு மையக் கருத்தை கொண்டிருப்பதுபோல் செய்யப்படுகிறது.
சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
முதலில், சிக்கன்காரி வெள்ளை நிற துணிகள் அல்லது பேஸ்டல் வண்ணங்களில் மட்டுமே செய்யப்பட்டாலும், தற்பொழுது துடிப்பான வண்ணங்களில் செய்யப்படும் சிக்கன்காரி ஆடைகளை இன்றைய தலைமுறையினர் மிகவும் விரும்பி அணிகின்றனர்.