என் மலர்
அழகுக் குறிப்புகள்

சரும வறட்சியை போக்கும் குளிர்கால பழங்கள்

- சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை.
- சரும சுருக்கங்களை குறைக்கும்.
குளிர் காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலையும், குளிர் காற்றும், குறைந்த ஈரப்பதமும் பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு வித்திடும். சரும வறட்சி, நீரிழப்பு, முகப்பரு போன்றவை எட்டிப்பார்க்கும். சில குளிர்கால பழங்கள் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டவை. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கக்கூடியவை.
1. பப்பாளி
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் பாப்பைன் என்ற நொதி நிறைந்த பழங்களுள் ஒன்று பப்பாளி. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்தையும் வழங்கும் ஆற்றல் கொண்டவை. முன்கூட்டியே முதுமை பருவம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். இந்த பழம் இயற்கையாகவே உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியது. அதனால் குளிர்கால வானிலையை எதிர்த்து போராடி உடல் போதுமான வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
2. மாதுளை
இந்தப் பழம் புத்துணர்ச்சியூட்டும் சக்தி கொண்டது. சரும துளைகளை போக்கவும் உதவும். சரும சுருக்கங்களையும் குறைக்கும். விரைவில் சருமம் முதுமை தோற்றத்திற்கு ஆளாகுவதை தள்ளிப்போடும். மாதுளை பழ ஜூஸ் பருகுவது சருமம் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும். சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தையும் வழங்கும். இதில் இருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி சரும வளர்ச்சிக்கு வித்திடும்.
3. அன்னாசி
இதில் புரோமைலின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. குளிர்காலத்தில் உடலை சூடாகவும், சருமத்தை எண்ணெய் பசைத்தன்மையுடனும் வைத்திருக்க துணை புரியும். மேலும் இதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும். சரும துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும்.
4. கிவி
இந்த பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள், தடிப்புகள் மற்றும் தோல் அழற்சியைக் குறைக்கக்கூடியவை. சருமத்தை சுத்தம் செய்யவும் உதவக்கூடியவை. கிவியில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது வலுவான சருமத்தை உருவாக்க உதவும். மேலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க வழிவகுக்கும்.
5. வாழைப்பழம்
பொட்டாசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் பளபளப்பு தன்மையை மேம்படுத்தக்கூடியவை. இறந்த செல்களை நீக்கி சருமத்தை பிரகாசமாக்கும். குளிர்காலத்தில் சரும வறட்சியை குறைத்து ஈரப் பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும்.
6. ஆரஞ்சு
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை உட்கொள்வது சரும பாதிப்புகளை சரிசெய்ய உதவும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சருமத்தின் இளமைப் பொலிவையும், பளபளப்பான தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ள உதவும்.