என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் கவனத்திற்கு...
- குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும்.
- வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எளிதில் உடல் நலம் தேறுவதற்கான வழிமுறைகளை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு வலி இருக்கும்.
அதிகமான ரத்தப்போக்கு, ரத்த உறைவு, வீக்கம் ஆகியவற்றால் திசுக்கள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்துமே முழுமையாக குணமாகுவதற்கு குறைந்தபட்சம் 12 வாரங்களாவது ஆகும். அதாவது, அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் உடல், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு குறைந்த பட்சம் 4 முதல் 5 மாதங்கள் ஆகும்.
நன்றாக ஓய்வு எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தப் போக்கு குறைந்து நின்று விடும். பொதுவாகவே குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும். ஒரு சிலருக்கு ஒரு மாத காலம் கூட சிறிது சிறிதாக வெளியேறலாம். அளவுக்கு அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
சிசேரியன் முறையால் கர்ப்பப்பையில் இருக்கும் 'யூட்ரின் தசை' நிறைய மாற்றங்களை எதிர்கொள்கிறது. எனவே அது மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். ஆகையால் முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இடைவெளி இருப்பது சிறந்தது. சிசேரியனுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பெற விரும்பும் பெண்கள், மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து தங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகு குழந்தைக்குத் திட்டமிட வேண்டும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களில் 70 சதவிகிதம் பெண்களுக்கு அடுத்து சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில் பால், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை சாப்பிட வேண்டும். அதையடுத்து திட உணவுகள் உட்கொள்ள வேண்டும். பல பெண்கள் இடியாப்பம், சர்க்கரை உள்ளிட்ட நார்ச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுகிறார்கள். அதைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள காராமணி, கேரட், பீன்ஸ், கீரை உள்ளிட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, முட்டை போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சாப்பிடுவது சிறந்தது. எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, அசைவ உணவுகளை சாப்பிடலாம். தையல் போட்ட இடங்களில் தண்ணீர் பட்டால் ஏதாவது ஆகி விடுமோ? என பல பெண்கள் அச்சப்படுகின்றனர். அது தவறான கருத்து. தையல் போட்ட இடங்களில் அழுக்கு சேராதவாறு சுத்தமாக குளிக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்