search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    40 வயதை கடந்த பெண்களுக்கான உணவுமுறைகள்
    X

    40 வயதை கடந்த பெண்களுக்கான உணவுமுறைகள்

    • தினமும் காலை உணவை தவறாமல் சாப்பிட்டுவிடுங்கள்.
    • உடலுக்கு வைட்டமின் டி சத்து மிக அவசியம்.

    பெண்கள் 40 வயதை தொடும்போதே பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதை விடுத்து, உடலுக்கு பொருத்தமான உணவுகளை சாப்பிட முன்வரவேண்டும். ஏனென்றால் 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் 'மனோபாஸ்' என்கிற மாதவிலக்கு நிரந்தரமாக நின்றுபோகும் கட்டத்தை அடையலாம்.

    எனவே அப்போது பெண்களின் உடலில் பெருமளவு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அது உடலிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதற்கு ஏற்றபடி உணவில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஆரோக்கியத்தை பாதுகாத்தால் தான் அழகாகவும் தோன்ற முடியும்.

    * காலை எட்டு மணிக்குள் தினமும் காலை உணவை தவறாமல் சாப்பிட்டுவிடுங்கள்.

    * உடலுக்கு வைட்டமின் டி சத்து மிக அவசியம். அதனால் வாரத்தில் மூன்று நாட்களாவது காலை வெயில் உடலில் பட வேண்டும்.

    * கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்திடுங்கள். வறுத்த, பொரித்த உணவுகளை அறவே ஒதுக்கிவிடுங்கள்.

    * வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை சாப்பிடுங்கள். அதில் மிளகுதூள் கலந்து சாப்பிடுவது எல்லா வயதினருக்கும் சக்தி தரும்.

    * மூன்று நேரமும் சாதம் உண்ணும் பழக்கம் இருந்தால், அதை முதலில் இரண்டு நேரமாக குறைத்து, பின்பு மதியம் ஒரு நேரம் மட்டும் சாப்பிடுங்கள். சாதத்தை மூன்று நேரமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியாமல் போய் விடும்.

    * 40 வயதிற்கு மேல் தசை பலமிழப்பு, கண்பார்வை குறைபாடு போன்றவை ஏற்படும். அவைகளை சரிசெய்ய கேரட் ஜூஸ் தயார் செய்து அதில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் பருகிவரவேண்டும். இது பார்வை நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது.

    * பெண்கள் 40 வயது தொடங்கும்போதே மாமிசம் உண்பதை நிறுத்திவிடுவது நல்லது. அதேபோல் கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களையும் பருகக்கூடாது. அதில் இருக்கும் பாஸ்பரஸ் அவர்கள் உடலில் இருக்கும் கால்சியத்தை வீணாக்கிவிடும். சிறுவயதில் இருந்தே பெண்களுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை வழங்கிவரவேண்டும்.

    * முட்டை, இறைச்சி மூலம் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைத்தால், அது உடலில் இருக்கும் கால்சியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். அதனால் பெண்கள் 40 வயதுக்கு மேல் அத்தகைய புரோட்டீனை தவிர்த்து, இயற்கை உணவுகள் மூலம் கிடைக்கும் புரோட்டீனை உட்கொள்ளவேண்டும். சோயாவில் இது அதிக அளவில் உள்ளது.

    * 40 வயதுக்கு மேல் இளநரை, முடி உதிர்தல், பார்வைக்குறைபாடு, தசை சுருக்கம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். அதற்கு நிவாரணம் தருவது, கறிவேப்பிலை. இதனை தினமும் எல்லா வகை உணவிலும் சேர்க்கிறோம். ஆனால் சாப்பிடும்போது அதனை மட்டும் எடுத்து அப்புறப்படுத்திவிடுகிறோம். இனியும் அவ்வாறு செய்யாதீர்கள். கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுங்கள். கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி போன்றவைகளையும் பயன்படுத்துங்கள்.

    * நாற்பது வயதாகும்போது ஊட்டச்சத்தியல் நிபுணரின் ஆலோசனையை பெற்று, உங்கள் உடலுக்கு பொருத்தமான உணவுகள் பட்டியலை பரிந்துரைக்க செய்யுங்கள். அந்த பட்டியல்படி உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். அதுபோல் டாக்டரை சந்தித்து உடல் பரிசோதனையும் செய்யுங்கள். அவர் பரிந்துரைத்தால் கால்சியம், வைட்டமின்-டி போன்ற மாத்திரைகளையும் உட்கொள்ளுங்கள்.

    Next Story
    ×