search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
    X

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற்கான சான்று இல்லை.
    • இன்று வரை பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

    பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறி வரும் உலகில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நிகழ்கின்றன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்று கூறி வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததற்கான சான்று இல்லை. இன்று வரை பல்வேறு வகையான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு பெண்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்ற சிறப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    உலகளவில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை வெளி உலகிற்கு எடுத்து கூறி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வழிவகுப்பதே இந்நாளின் நோக்கமாகும். 1960-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதி டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் என்று அழைக்கப்படும் 3 சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியர்கள் உத்தரவின்பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் 'மறக்கமுடியாத வண்ணத்துப்பூச்சிகள்' என்று பெண்களுக்கு எதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினார்கள். மிராபெல் சகோதரிகளை நினைவு கூறும் விதமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நவம்பர் 25-ந் தேதி (இன்று) ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    ஐ.நா.சபையானது 1999-ம் ஆண்டில் இத்தினத்தை சட்ட பூர்வமாக அங்கீகரித்தது. பாலியல் வன்கொடுமைகள், அடிமைத்தனம், குடும்ப வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை இந்நாள் வலியுறுத்துகிறது. மேலும் பிரச்சினையின் அளவு மற்றும் உண்மை தன்மை பெரும்பாலும் மறைக்கப்படுவதை எடுத்து கூறுகிறது. 1993-ம் ஆண்டில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை மனித உரிமை மீறலாக அங்கீகரித்து இந்த வகையான பிரச்சினைகளை வெளிப்படையாக கூறுவதற்கான வழியை அமைத்து கொடுத்தது.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவீதம் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களால் தான் ஏற்படுகிறது என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கண்டிப்பது, பெண்கள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். வருங்கால தலைமுறைக்கு பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம் என்று இந்நாளில் உறுதி கொள்வோம்.

    Next Story
    ×