search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்கள் தொழில் துறையில் வெற்றிபெற வழிமுறைகள்
    X

    பெண்கள் தொழில் துறையில் வெற்றிபெற வழிமுறைகள்

    • எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள்.
    • இன்முகத்துடன் பேசுங்கள்.

    தொழில்துறையில் வெற்றி பெற சில வழிமுறைகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.

    உழைக்க தயாராகுங்கள்

    வேலை கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். உழைப்பை எறும்பிடம் கற்றுக்கொள்ளலாம். அது தன் எடையை விட மிக அதிக எடையை தூக்கி கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுவதே உழைப்புக்கு உதாரணம். நாளைய தேவைக்கு இன்றே அது களத்தில் இறங்கி விட்டது. நீ மட்டும் உழைக்க தயங்குவது ஏன்? சோம்பலை உதறி தள்ளு. எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள். அந்த உழைப்பு நிச்சயம் உங்களை சமூகத்தில் ஒரு அடையாளம் காட்டும்.

    இன்முகத்துடன் பேசுங்கள்

    தொழிலை நடத்துபவர்கள் தன்னிடம் பணிபுரியும் வேலைக்காரர்களிடமும், நுகர்வோர்களிடமும் இன்முகத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் கடினமான வேலை என்றாலும் அதை துச்சமாக மதித்து வேலைக்காரர்கள் கூடுதல் நேரமும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். சிடுமூஞ்சியுடன் பேசினால் எதிர்பார்த்த வேலை நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது.

    நுகர்வோரும் நம்முடைய இன்முக பேச்சில் மகிழ்ந்து கூடுதல் பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு உண்டு. இன்முகத்துடன் பேசுங்கள். அது உங்கள் மதிப்பை தானாக மற்றவர்களிடம் இருந்து உயர்த்தி காட்டும்.

    நேரம் தவறாமை

    தொழில் செய்பவர்கள் நேரம் தவறாமல் செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய விரும்பும் பொருட்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்தால் தான் மீண்டும் ஆர்டர் கிடைக்கும். அது போல் நேரம் தவறாமல் பணிக்கு செல்ல கற்று கொள்ள வேண்டும். சூரியன் ஒருநாள் நேரம் தவறி உதித்தால் நிலைமை என்னவாகும். சிந்தித்து செயல்படுங்கள். நேரத்துடன் உழையுங்கள்.

    முயற்சியை கைவிடாதீர்கள்

    முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கேற்ப முயற்சி செய்தால் தான் எந்த துறையிலும் சாதிக்க முடியும். ஆதலால் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். தோல்வி கிடைக்கிறதே என்று செய்ய முயன்ற தொழிலில் பின்வாங்கினால் நிச்சயம் சாதிக்க முடியாது.

    அந்த தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். பின்னர் தோல்வி தவிர்ப்பது எப்படி என்று உழையுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும். கரையை தொடமுடியவில்லை என்று எப்போதும் அலைகள் தன் முயற்சியை கைவிடுவதில்லை. என்றாவது ஒருநாள் சுனாமி, பேரலைகளுடன் அது கரையை எட்டும்.

    திட்டமிடுதல் அவசியம்

    ஒருவர் தொழில்முனைவராக வர வேண்டும் என்றால் அதற்கு திட்டமிடுதல் அவசியமாகும். நாம் மேற்கொள்ள இருக்கும் தொழிலில் வெற்றி பெற முடியுமா? அந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் பெறலாமா? என்று ஆராய்ந்து திட்டமிட்டு தொழிலை தேர்வு செய்ய வேண்டும். திட்டமிடாமல் செய்த காரியம் தோல்வியில் தான் முடியும். எனவே நீங்கள் எந்த தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது நமக்கு சரிப்பட்டு வருமா என்று ஆராய்ந்து, அந்த தொழிலை மேற்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அந்த தொழிலில் வெற்றியை பெற முடியும்.

    விளம்பர யுக்தி

    இன்றைய போட்டி உலகில் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் உங்கள் நிறுவனத்தை அவசியம் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரக்கூடிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். விளம்பரம் இல்லையெனில் உங்கள் பொருட்களின் தன்மை பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    பெரிய, பெரிய நிறுவனங்கள் மக்களிடம் மிகவும் பரிட்சம் ஆன பிறகும் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி வருவதே அது தங்கள் நிறுவனம் மக்கள் மனதை விட்டு அகன்று விடக்கூடாது என்பதற்காக தான். ஆதலால் நீங்கள் எந்த தொழிலை ஆரம்பித்தாலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எளிதில் மக்கள் மனதில் புரியும்படி விளம்பரம் செய்யுங்கள். அதன் மூலம் உற்பத்தி பொருட்கள் அதிகரித்து அதிக லாபம் கொட்டும்.

    இதுபோல் இன்னும் பல வழிமுறைகள் உள்ளன.

    Next Story
    ×