என் மலர்
இமாச்சல பிரதேசம்
- தர்மசாலாவில் வெள்ள பாதிப்பு குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
- பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி சந்தித்து கலந்துரையாடினார்.
சிம்லா:
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை இமாச்சல பிரதேசம் புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பிறகு அவர் புறப்பட்டார்.
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
தர்மசாலாவில் வெள்ள பாதிப்பு குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி சந்தித்து கலந்துரையாடினார். தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில மீட்புப்படையினரையும் அவர் சந்தித்தார்.
இமாச்சல பிரதேச பயணத்தை முடித்த பிறகு இன்று மாலை பிரதமர் பஞ்சாப் செல்கிறார்.
- கால்வாயில் இரட்டைக் குழந்தைகளின் உடல்களை கண்டெடுக்கப்பட்டது.
- சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டபொது பெற்ற தாயே கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் இரட்டைக் குழந்தைகளை கால்வாயில் வீசி கொலை செய்த, கொடூர தாய்க்கு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி, மண்டிக்குச் செல்லும் பாதையில் உள்ள ஸ்கொடி கால்வாயில் இரட்டைக் குழந்தைகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இரண்டும் பெண் குழந்தைகளாகும்.
இந்த குழந்தைகளை கொலை செய்து வீசியது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் குழந்தைகளை தூக்கி வீசும் காட்சியை பார்த்து அதிர்ந்தனர். மேலும், அருகில் உள்ள மற்ற சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரோஹினா என் பெண்தான் குழந்தைகளை கொலை செய்து வீசியவர் என்பதை கண்டுபிடித்தனர். மேலும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அதை உறுதிப்படுத்தினர்.
அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரோஹினா தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி, மற்றொரு நபருடன் ஜலந்தரில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால், மண்டியில் உள்ள அவரது முன்னாள் கணவர் வீட்டிற்கு வரும்போது, புதிதாக பிறந்த குழந்தைகள் இல்லாமல் வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளிக்க, குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
- உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன்தான்.
- நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார்.
சிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.
அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:
நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.
எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.
நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது.
- தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை மேற்கொண்டார்.
சிம்லா:
இமாசலபிரதேசம் மண்டி அருகே உள்ள சவுகார்காட் பகுதியில் சுந்தர் என்ற மலைக்கிராமம் உள்ளது. ஆஸ்பத்திரி எதுவும் இல்லாத அவலநிலை கொண்ட இந்த கிராம மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பக்கத்து ஊரான டிகாரில் இருந்துதான் டாக்டர் அல்லது நர்சு வரவேண்டும். இந்தநிலையில் அக்கிராமத்தில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து 2 மாதங்களாகின.
பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றநிலையில் மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமத்தை கடந்த செல்ல சிற்றாறு ஒன்றை கடக்க வேண்டும். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது. இதனால் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் நோய்வாய்ப்பட்டுவிடுமோ என்று அதன் தாய் அஞ்சினார்.
ஆனால் டிகாரில் அரசு நர்சாக பணிபுரிந்து வரும் கமலாவோ, குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார். அதற்காக தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை மேற்கொண்டார். இடையே முட்டுக்கட்டையாக இருந்த காட்டாற்றை, உயிரை துச்சமாக எண்ணி கடந்து கடமையை நிறைவேற்றிவிட்டு திரும்பினார்.
ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தோடு பாய்ந்தோடிய ஆற்றை கடக்க, அதனிடையே இருந்த பாறாங்கற்கள் மீது கமலாவின் கால்கள் துள்ளிக்குதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் நெஞ்சை உறைய செய்து 'வைரல்' ஆகி வருகிறது.
நர்சு கமலாவின் மனதிடத்துடன் கூடிய சேவை மனப்பான்மையை பாராட்டி வாழ்த்துகள் குவிகின்றன.
- மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
- டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சிம்லா:
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
லாஷவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் மேக வெடிப்பால் பலத்த மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்பத் கிராமத்தில் நிலைமை மோசமாக உள்ளது. முன் எச்சரிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிம்லா மாவட்டத்தில் பலத்த மழையால் பஸ் நிலையம் இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள பல கடைகள் சேதம் அடைந்தன. கர்பத், கங்குட் மற்றும் உட்கோஸ் நாலா பகுதிகளிலும் மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்தன.
மேக வெடிப்பால் 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப்பிரதேசத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல தலைநகர் டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டெல்லியில் இன்றும் பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மலானா-I நீர்மின் திட்டத்தின் அணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது
- சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அணை இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திடீர் மேக வெடிப்பு காரணமாக மலானா நதி கொந்தளிப்பாக மாறியது. வெள்ளத்தின் தீவிரத்தால் நேற்று, மலானா-I நீர்மின் திட்டத்தின் அணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வெள்ளத்தில் மலானா தடுப்பணை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கார்கள், பாலங்கள் மற்றும் வீடுகள் காகிதப் படகுகள் போல அடித்துச் செல்லப்பட்டன.
சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் நான்கு முதல் ஐந்து தொழிலாளர்கள் நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இடம்பெயர்ந்த மக்கள் கைவிடப்பட்ட கட்டிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், உணவு, சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) காவல்துறை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கனமழையைத் தொடர்ந்து ரெயில்வே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரெயில்வே பாலம் மூடப்பட்டது.
இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், காங்ரா பகுதியில் பாலத்தில் ரெயில் சென்றுகொண்டிருந்த போதே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக தாங்கு சுவர் இடிந்து விழுந்த சமயத்தில் எந்த விபத்தும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர் (SP) அசோக் ரத்தன், "அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ரெயில்வே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரெயில்வே பாலம் மூடப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளோம்" என்றார்.
- ஹாட்டி சமூகத்தில் "ஜோடிதரன்" அல்லது "திரௌபதி பிரதா" என்று இந்த பலதார மணம் அறியப்படுகிறது.
- பாரம்பரிய பஹாரி நாட்டுப்புற இசையுடன் நடனமாடி, மணமக்களை வாழ்த்தினர்.
இமாச்சல பிரதேசத்தின் சர்மூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ்-கிரி என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் ஹாட்டி சமூகத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு நடந்துள்ளது.
ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி என்ற சகோதரர்கள், அருகிலுள்ள குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணை, குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் முழு சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
ஹாட்டி சமூகத்தில் "ஜோடிதரன்" அல்லது "திரௌபதி பிரதா" என்று அறியப்படும் இந்த பலதார திருமண வழக்கம், பொதுவாக ரகசியமாகப் பின்பற்றப்பட்டாலும், இந்த திருமணம் ஊரார் அறிய பிரமாண்டமாக நடந்துள்ளது.
இந்த வழக்கம் குடும்ப ஒற்றுமையைப் பேணுவதற்கும், மூதாதையர் நிலத்தைப் பிரிப்பதைத் தடுப்பதற்கும், பெண்கள் விதவையாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் பின்பற்றப்படுகிறது.
சகோதரர்களில் ஒருவரான பிரதீப் ஜல் சக்தி துறையிலும், கபில் வெளிநாட்டிலும் பணிபுரிகின்றனர். இருவரும் தங்கள் முடிவை பரஸ்பரமானது என்றும், தங்கள் வரலாற்றைப் பற்றி பெருமைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மணமகள் சுனிதா, "இது எனது தேர்வு. நான் ஒருபோதும் வற்புறுத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில், அண்டை கிராமங்களைச் சேர்ந்த மக்களும் உறவினர்களும் பங்கேற்று, பாரம்பரிய பஹாரி நாட்டுப்புற இசையுடன் நடனமாடி, மணமக்களை வாழ்த்தினர்.
- 184 பேர் காயமடைந்துள்ளனர், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.
- 31 திடீர் வெள்ளங்கள், 22 மேக வெடிப்புகள் மற்றும் 18 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 20 முதல் ஜூலை 14 வரை, மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்களில் மொத்தம் 105 பேர் உயிரிழந்துள்ளனர். 184 பேர் காயமடைந்துள்ளனர், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதில் மழை தொடர்பான சம்பவங்களால் 61 பேரும், சாலை விபத்துக்களால் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். மண்டி (17), காங்ரா (14) மற்றும் குல்லு (4) உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
கனமழை காரணமாக மாநிலத்தில் 786 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. 199 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த பருவமழையில், மாநிலத்தில் 31 திடீர் வெள்ளங்கள், 22 மேக வெடிப்புகள் மற்றும் 18 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
மண்டியில் 141 சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஜூன் 30 அன்று பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட 27 பேரை தேடும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
- கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
- BNS சட்டத்தின் 64(2) (பாலியல் வன்கொடுமை) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இமாச்சலப் பிரதேசத்தில் தனது 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஜூலை 3 ஆம் தேதி மதியம் தனது பேரன் வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
BNS சட்டத்தின் 64(2) (பாலியல் வன்கொடுமை), 332(B) (அத்துமீறி நுழைதல்) மற்றும் 351(3) (மிரட்டல்) பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
- நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.
இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது.
ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
ஜூன் 30 அன்று, நள்ளிரவில் மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு முழித்த அதன் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.
உடனடியாக அவர் அந்த நல்லறவில் அந்த கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார். இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.
நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளனர்.
- மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது.
- ஜூன் 20 முதல் ஜூலை 6 வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 23 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 16 நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேகவெடிப்பு, மழை வெள்ளம் காரணமாக மண்டி மாவட்டத்தில் உ்ள துனாங் நகரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் வங்கி செயல்பட்டு வந்தது. மழை வெள்ளத்தால் வங்கியின் ஒரு கதவு முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இரண்டு கதவுகள் வளைந்து சேதமடைந்துள்ளது.
மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம் மற்றும் அடகு வைத்திருந்த நகைகள் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
துனாங்கில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஏராளமான வணிகர்கள், விவசாயிகள் கணக்கு வைத்துள்ளனர். தினசரி வரவு, செலவு மேற்கொண்டு வந்துள்ளனர். 8 ஆயிரம் மக்களுக்கு இந்த ஒரு வங்கிதான் எனக் கூறப்படுகிறது.
இதனால் ஏராளமான பணம் மட்டும் இல்லாமல், அடது வைத்த நகைகள் ஏராளமான இருக்கும் என கருதப்படுகிறது. கதவு இல்லாமல் சகதியில் மூழ்கிக் கிடக்கும் வங்கியில் இருந்து நகைகளை கொள்ளையடிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளை அகற்றிய பிறகுதான் சேதம் குறித்து முழு விவரம் தெரியவரும்.






