search icon
என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இமாச்சலபிரதேம் மாநிலம் மண்டியில் விடுமுறை கிடைக்காததால் வீடியோ கால் மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    துருக்கியில் பணிபுரியும் மணமகனுக்கு விடுமுறை அளிக்க முதலாளி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே மணமகளின் நோய்வாய்ப்பட்ட தாத்தா அவளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனால் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் மெய்நிகர் 'நிக்கா'வுக்கு ஒப்புக்கொண்டனர்.

    இதனால் அதிநவீன தொழில்நுட்பத்தால் வீடியோ கால் மூலம் மணமகன் துருக்கியில் இருந்தும், மணமகள் பிலாஸ்பூரிலிருந்தும் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிம்லாவில் உள்ள கோட்கரைச் சேர்ந்த ஆஷிஷ் சிங்கும், குலுவில் உள்ள பூந்தரைச் சேர்ந்த ஷிவானி தாக்குரும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சி.ஐ.டி, தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பு.
    • பிரபல ஓட்டலில் இருந்து வந்த சமோசாக்கள் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு வந்த சமோசாக்களை அவருடைய பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கியது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. இதை கிண்டல் செய்துள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக இருந்து வருகிறார். கடந்த மாதம் 21-ந்தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சி.ஐ.டி. தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

    முதல்வர் வருகையையொட்டி பிரபல ஓட்டலில் இருந்து 3 பெட்டிகளில் சமோசாக்கள் மற்றும் கேக் வந்துள்ளது. இந்த சமோசாக்கள் முதலமைச்சர் பாதுகாப்பு ஸ்டாஃப்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடத்த இமாச்சல பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இது இமாச்சல பிரதேச மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் சமோசா தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறித்து பா.ஜ.க. தலைமை செய்தி தொடர்பாளர் ரந்த்வீர் சர்மா "காங்கிரஸ் முதல்வரின் சமோசா குறித்து கவலைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றி அக்கறை கொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "இந்த சம்பவம் ஹிமாச்சல பிரதேச அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உண்மையில், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி., தொடர்பான நிகழ்ச்சிகளில், இதுபோன்ற ஒருங்கிணைப்பு பிரச்னையால், அரசு இயந்திரம் தர்மசங்கடத்திற்கு உள்ளாகிறது" என்றார்.

    • இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
    • கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநில காஙகிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங்.

    இந்நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்படுகிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, மாவட்டத் தலைவர்கள் மற்றும் பிளாக் காங்கிரஸ் கமிட்டிகளின் மாநிலப் பிரிவு முழுவதையும் உடனடியாக கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

    இமாச்சலில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே, ஒடிசாவில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து கட்சியை கூண்டோடு கலைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது நினைவு கூரத்தக்கது.

    ஹமிர்பூர்:

    இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

    ஆனால் இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணின் சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத வினோதம் இருந்து வருகிறது.

    இமாசல பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் சம்மூ என்ற கிராமம் உள்ளது. பல நூற்றாண்டு களுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த திருமண மான பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தார். அவர் தீபாவளி கொண்டாடு வதற்காக தன் தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அப்போது மன்னனின் அரசவையில் சிப்பாயாக பணிபுரிந்து வந்த அவரது கணவர் திடீரென இறந்து விட்டார். இந்த செய்தி தீபாவளி கொண்டாட வந்த அவரது மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு பேரதிர்ச்சியடைந்த அந்த பெண் அழுது புரண்டார். துக்கம் தாங்காமல் இருந்த அந்த பெண் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது அவர் அந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று சபித்ததாக புராண கதைகள் கூறுகிறது.

    அன்றிலிருந்து இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. பக்கத்து கிராமங்களில் தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு சத்தம் கேட்கும் நேரத்தில் இங்கு மயான அமைதி நிலவுகிறது.

    தீபாவளி பண்டிகையின் போது இந்த கிராமத்தில் வீடுகளில் தீபம் ஏற்றுவதில்லை. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்காது. அதனையும் மீறி தீபாவளி கொண்டாடினால் கிராம மக்களுக்கு துரதிஷ்ட மும், பேரழிவும் ஏற்படும். மற்றும் மரணத்தை வரவழைக்கும் அபாயமும் ஏற்படும் என்று இளைய சமூகத்தினரை பெரியவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதனால் இந்த கிராம மக்கள் யாரும் அந்த பெண்ணின் சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடுவதில்லை. பல நூற்றாண்டுகளாக இன்று வரை அது தொடர்கிறது.

    இதுகுறித்து திருமணமாகி அந்த கிராமத்திற்கு வந்த பஞ்சாயத்து நிர்வாகியான பூஜாதேவி என்ற பெண் ஒருவர் கூறியிருப்பதாவது:-

    நான் திருமணமாகி இந்த கிராமத்திற்கு வந்ததில் இருந்து தீபாவளி கொண்டாடுவதை பார்த்த தில்லை. இந்த கிராம மக்கள் வெளியூரில் குடியேறினாலும் அந்த பெண்ணின் சாபம் அவர்களை விட்டு விலகவில்லை.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு கிராமத்தில் குடியேறினார். அங்கு அவர் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பலகாரம் செய்த போது அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. அந்த பெண்ணின் சாபத்தால்தான் இது நடந்ததாக கிராம மக்கள் நம்பு கின்றனர்.

    இதனால் கிராம மக்கள் தீபாவளியன்று அந்த பெண்ணை வணங்கி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர் என்று அந்த பெண் கூறினார்.

    மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த 70 தீபாவளிகளை கண்ட பெரியவர் ஒருவர் கூறியிருப்பதாவது:-

    இந்த கிராமத்தில் யாராவது ஒருவர் தீபாவளியை கொண்டாடும் போதெல்லாம் ஏதோ ஒரு துரதிஷ்டம் அல்லது இழப்பு ஏற்படுகிறது என்றார்.

    மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும் போது, பல நூற்றாண்டுகளாக இந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.

    தீபாவளி நாளில் ஒரு குடும்பம் தவறுதலாக பட்டாசுகளை வெடித்து வீட்டில் பலகாரம் செய்தால் பேரழிவு நிச்சயம் என்று கூறியுள்ளார்.

    இளைய தலைமுறையினர் இந்த நம்பிக்கையில் இருந்து விடுபட விரும்பினாலும் கடந்த காலத்தில் நடந்த விபரீதங்கள் அவர்களை தீபாவளி கொண்டாடுவதை கட்டுப்படுத்தியுள்ளது. 

    • சுதந்திரப் போராட்ட சமயத்தில் உருவானது காங்கிரஸ் கட்சி.
    • ராகுல் காந்தி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின் மொழியில் பேசி வருகிறார்.

    இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

    இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிர்மௌர்[Sirmaur] மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய நட்டா, சுதந்திரப் போராட்ட சமயத்தில் உருவானது காங்கிரஸ் கட்சி. எனவே சுதந்திரம் கிடைத்த பின்னர் இனியும் அதற்கான தேவை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்றே காந்தி விரும்பினார்.

     

    ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையினால் கட்சியை இடது பக்கத்தில் இருன்டயது வலது பக்கமாகவும், வலம் இருந்து இடமாகவும் அவர்கள் நகர்த்திக்கொண்டுள்ளனர்.

    இப்போதெல்லாம் ராகுல் காந்தி நகர்ப்புற [urban] நக்சல் மொழியிலிருந்து முன்னேறி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின்  மொழியில் பேசி வருகிறார் என்று சாடியுள்ளார். 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது

    • ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இமாச்சல பிரதேசம்:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரியை அரசு அறிவித்துள்ளது.

    இந்த புதிய விதியின் கீழ், மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும்.

    ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் குடியிருப்பாளர்களை பாதிக்கும் ஒரு முடிவாகும்.


    இந்த கட்டணம் ஏற்கனவே செலுத்தி வரும் கழிவுநீர் வடிகால் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும், சேகரிக்கப்பட்ட தொகை ஜல் சக்தி துறைக்கு செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    பல நகர்ப்புற வீடுகளில் பல கழிப்பறைகள் இருப்பதால் நகர்ப்புறங்களில் இந்த வரி குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, கழிவறை கட்டுவது அவசியம் என்று அரசு ஒருபக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தது. இப்போது கழிப்பறைக்கு வரி போடப்படுகிறது. இதனால் குடும்பங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கிறது.

    இந்த புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • 2019-ம் ஆண்டு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
    • 10-ந்தேதி வரை அப்பகுதியில் தேடுதல் பணி தொடரும்.

    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 12 ரக இரட்டை எஞ்சின் விமானம் 102 வீரர்களை ஏற்றிக்கொண்டு கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி சண்டிகரில் இருந்து காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    இமாச்சல பிரதேச மாநிலம் இமயமலை பகுதியில் உள்ள ரோஹ்தாங் கணவாய் பகுதியில் சென்ற போது திடீரென விபத்தில் சிக்கிய விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 102 பேரும் பலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் பனிக்கட்டி படர்ந்த அந்த பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் சடலங்களை மீட்க முடியவில்லை.

    இதன் பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு மலையேறும் நிபுணர்கள் விமானத்தின் சிதறிய பாகங்களை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் சடலங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியில் இருந்து 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் டோக்ரா சாரணர்கள் மற்றும் திரங்கா மலை மீட்பு பணியாளர்கள் குழுவினர் சந்திரபாகா மலைப்பயணத்தின் போது மேலும் 4 வீரர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணி நடந்தது. இதில் அவர்கள் மல்கான் சிங், சிப்பாய் நாராயண் சிங், தாமஸ் சரண் என்பது தெரியவந்துள்ளது. இதில் தாமஸ் சரண், கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூரைச் சேர்ந்தவர். அவரது தாயார் எலியாமாவிடம் தாமஸ் சரண் உடல் மீட்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராணுவ ஆவணங்களின் உதவியுடன் மல்கான் சிங்கின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. ராணுவ மருத்துவப் படையில் பணியாற்றிய சிப்பாய் நாராயண் சிங்கும், அதேபோல அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

    அவர் உத்தரகாண்ட் மாநிலம் கர்வாலில் உள்ள சாமோலி தாலுகா கோல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

    இன்னொருவரின் உடலை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்திய விமானப் படையின் ஏ.என். 12 விமானம் விழுந்து நொறுங்கி 56 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வருகிற 10-ந்தேதி வரை அப்பகுதியில் தேடுதல் பணி தொடரும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

    • மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
    • இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இதே போன்ற உத்தரவை யோகி அரசு வெளியிட்டிருந்தது.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் மற்றும் முகவரிகளை பலகைகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் இந்த விதி அமல்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

    இன்று நடைபெற்ற மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்துவதை மேற்பார்வையிட, இமாச்சல பிரதேச சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, அமைச்சர்கள் விக்ரமாதித்ய சிங் மற்றும் அனிருத் சிங் ஆகியோர் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்தார்.

    இதற்கு முன்பு உத்தரபிரதேசத்தில் இதே போன்ற உத்தரவை யோகி அரசு வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்தாண்டு கட்சி தாவல் ல் தடை சட்டத்தின்கீழ் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான இமாச்சலபிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்களுக்கு பதவிக் காலம் முடிந்த பின்பு மாதம் ரூ.36,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

    இம்மாநிலத்தில் கடந்தாண்டு கட்சி தாவல் ல் தடை சட்டத்தின்கீழ் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். ஆகவே எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இமாச்சலபிரதேசத்தில் உள்ள இனிப்பு கடைக்குள் கரடி ஒன்று நுழைந்துள்ளது.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள ஜோட் என்ற இடத்தில் உள்ள இனிப்புக் கடைக்குள் நுழைந்த கரடி அங்குள்ள பர்பி வகை இனிப்பு வகைகளை சுவைத்து சாப்பிட்டுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இதே போன்றதொரு நிகழ்வு அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. டென்னசி மாகாணத்தில் உள்ள அனகீஸ்டா மவுண்டன்டாப் அட்வென்ச்சர் பூங்காவில் நுழைந்த கரடி, அங்குள்ள உணவை சாப்பிடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
    • மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்தியாவில் பருவமழை பாதிப்பில் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி பலியானோர் எண்ணிக்கை 365ஆக அதிகரித்து உள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    வயநாடு இயற்கை பேரிடர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த புதன்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் ஒரு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 1 வீடு மட்டுமே எஞ்சியுள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து சமேஜ் கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவர் கூறியதாவது:- புதன்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது பலத்த இடி இடித்தபோது வீடே உலுக்கியது. இதையடுத்து நாங்களே வெளியே வந்து பார்த்தபோது, கிராமம் முழுவதும் அடித்துச்செல்லப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் கிராமத்தில் உள்ள கோவிலில் போய் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தோம். என் வீடு மட்டும் பேரழிவில் இருந்து தப்பியது, ஆனால் மற்ற அனைத்தும் என் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டன என்று கூறினார்.

    அதே கிராமத்தை சேர்ந்த வயதான பக்ஷி ராம் கூறியதாவது, "எனது குடும்பத்தினர், சுமார் 14 முதல் 15 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் பற்றிய செய்தி அதிகாலை 2 மணிக்கு எனக்கு கிடைத்தது. அப்போது ராம்பூரில் இருந்ததால் நான் உயிர் பிழைத்தேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். எல்லாம் அழிந்துவிட்டன. என் குடும்பத்தினரை தேடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

    இதனிடையே மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, கிராமத்தில் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கான நிதி உதவி விரைவில் அறிவிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
    • கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது.

    பருவமழை பாதிப்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவிக்கின்றன. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் மழை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த வரிசையில், இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் மேக வெடிப்பு காரணமாக கனமழை வெளுத்து வாங்குகிறது.

    சிம்லாவை அடுத்த ராம்பூரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மேக வெடிப்பு தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

    இந்த குழுவில் பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் அனுபம் காஷ்யப் மற்றும் மாவட்ட மூத்த காவல் துறை தலைவர் சஞ்சீவ் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். "எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி மேக வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் 20 பேர் மாயமாகி உள்ளனர்," என காஷ்யப் தெரிவித்தார்.

     

    மேக வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி பகுதியிலும் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேக வெடிப்பு காரணமாக கட்டிடம் ஒன்று சீட்டு கட்டு போன்று சரிந்து விழுந்தது. மேலும் சாலைகள் சேதமடைந்துள்ளன.


    இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி உத்தராகண்ட் மாநிலத்தில் ஃபியூரி புயல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெய்து வரும் கனமழையில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    ×