search icon
என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் பிரசவம் நடந்துள்ளது
    • இந்த இரட்டை குழந்தைகளின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ராஜஸ்தானில் பிளாஸ்டிக் போன்ற கடினத்தன்மை கொண்ட தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள அரிதினும் அரிதான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் உள்ள நோக்கா [Nokha] நகரரை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் இந்த தன்மையோடு  ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை எடை 1.5 கிலோவாகவும், பெண் குழந்தை எடை 1.53 கிலோவாகவும் இருந்துள்ளது.

    இதற்கு ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் [Harlequin-type ichthyosis] என்று மருத்துவத்தில் பெயர் உண்டு. மிகவும் அரிதான இந்த தன்மை கொண்ட குழந்தைகள் இந்தியாவில் பிறப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    இந்த இரட்டை குழந்தைகளின் ஆயுட்காலம் சில வருடங்கள் மட்டுமே என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சில குறிப்பிட்ட நிலைகளில் வளரிளம் பருவம் வரை உயிர்பிழைத்திருக்க முடியும் வேண்டும் தெரிவிக்கின்றனர்.

    • கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் இந்த முடிவு முன்மொழியப்பட்டது
    • பசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்று அழைக்கக்கூடாது.

    தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை தெருமாடுகள் [Stray Cows] என்று அழைப்பது வழக்கம். ஆனால் அது மாடுகளை அவமதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை இனிமேல் 'ஆதரவற்ற மாடுகள்' [Destitue/Helpless Cows] என்று அலையாக வேண்டும் என்று ராஜஸ்தான் பாஜக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    கடந்த ஜூலை மாதம் நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தின்போது கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜோராராம் குமாவத் இந்த மாற்றத்தை முன்மொழிந்த நிலையில் நிலையில் தற்போது அரசு அதை உத்தரவாக பிறப்பித்துள்ளது.

    எனவே அதன்படி தெருவில் சுற்றித் திரியும் பசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்பதற்கு பதிலாக ஆதரவாற்ற மாடுகள் என்றே ராஜஸ்தான் மக்கள் அழைக்க வேண்டும்.

    • எஸ்யுவி காரில் இருந்து இறங்கும் அவர் போனை பார்த்தவரே கீழ் இறங்கி நடந்து வருகிறார்.
    • 5 வது முறையே டீனாவின் வணக்கத்தை கவனித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் [Barmer] மாவட்ட ஆட்சியர் டீனா டாபி. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலெக்டர் டீனா டாபி ராஜஸ்தான் முன்னாள் பாஜக கட்சித் தலைவர் சதீஷ் பூண்யா - வுக்கு 7 வினாடிகளில் 5 முறை தலை குனிந்து வணக்கம் வைத்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பார்மர் மாவட்டத்தில் முன்னெடுப்பாக நடத்தப்பட்ட துப்புரவு பணிகளை பார்க்க வந்திருக்கிறார்.

    அப்போது எஸ்யுவி காரில் இருந்து இறங்கும் அவர் போனை பார்த்தவரே கீழ் இறங்கி நடந்து வருகிறார். அவரை வரவேற்க காத்திருந்த டீனா அவருக்கு 4 முறை தலை குனிந்து வணக்கம் வைக்கிறார். ஆனால் சதீஷ் அதை கவனிக்கவில்லை. அதன்பின் 5 வது முறையே டீனாவின் வணக்கத்தை கவனித்துள்ளார்.

    அதன்பின் டீனா நன்றாக செயல்படுவதாக அவரை பாராட்டியுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    • மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
    • கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட தீவிர இந்து அமைப்பினரால் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மத்திய பாஜக அரசின் முன்னெடுப்பில் ரூ.1,800 கோடி பொருட்செலவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் உள்ளது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் சூழ இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9, 2019 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் இப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்பிறகே 2020 இல் பாஜகவால் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய அனுபவம் குறித்து தனது சொந்த ஊரான புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சில வழக்குகளில் ஒரு முடிவுக்கு வரவே முடியாதபடி இருக்கும். அப்படித்தான் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனை [குறித்த வழக்கு] மூன்று மாதங்களாக என் முன் இருந்தது.

    அப்போது தினமும் நான் கடவுளின் சிலைக்கு முன்னாள் அமர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லும்படி வேண்டினேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அவர் ஒரு வழியை காண்பிப்பார் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சந்திரசூட் சாமி தரிசனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த கருத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். ஒரு சாமானியனுக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பணம் இல்லாமல் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும். ED, CBI மற்றும் IT ஆகியவற்றின் தவறான பயன்பாடு நிறுத்தப்பட்ட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்திருந்தால் நிறுத்தப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த டெம்போ மீது மோதியது.
    • காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ராஜஸ்தானில் பேருந்தும் டெம்போ வாகனமும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று இரவு குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து தோல்பூர் மாவட்டத்தில் உள்ள சுனிபூர் அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த டெம்போ மீது மோதியது.

    இந்த விபத்தில் இர்பான்(38), அவரது மனைவி ஜூலி (34) மற்றும் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பஸ் ஓட்டுநர் அதிக வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • திருமணமான 8 மாதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
    • இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

    உடன்கட்டை எனும் சதி 

    ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றி கொல்லப்பட்டார். அதாவது, கணவனின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் சிதைத்தீயில் ரூப் கவுரை இறக்கி அவ்வூர் மக்கள் கொலை செய்தனர்.

    இந்து தர்மப் படி இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர். சதி [sathi] என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் இது குறிப்பிடப்படுகிறது. கணவன் இறந்தால் மனைவியும் விரும்பி உடன்கட்டை ஏறவேண்டும் என்ற வழக்கம் இந்துமதத்திலிருந்து வந்தது.

    பழமைவாதம் 

    மனைவி விரும்பாவிட்டாலும் வலுக்கட்டாயமாக அவர்கள் தீயில் கருகப்படுவார்கள். இந்த கொடுமையான வழக்கத்தை ஒழிக்க சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்டோர் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து 1829 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராய் வில்லியம் பெண்டிங் பிரபு சதி வழக்கத்தை முற்றிலுமாக தடை செய்தார்.

    ஆனாலும் தீவிர பழமைவாத இந்துக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டத்தை மீறி சதி பின்பற்றப்பட்டுவந்தது. தடை செய்யப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டு கடந்தும் இந்த கொடூர வழக்கத்தை பழமைவாதம் பேசும் இந்துக்கள் கைவிடுவதாக இல்லை. அப்படி 1987 செப்டம்பர் 4 ஆம் தேதி கணவனின் எரியும் சிதையில் ஏற்றப்பட்டவரே 18 வயது ரூப் கவுர். இவரே இந்தியாவில் சதியால் உயிரிழந்த கடைசி பெண் என்று நம்பப்படுகிறது.  

     எரிக்கப்பட்ட ரூப் கவுர் 

     ரூப் கவுர் 18 வயதை எட்டியதும் 1987 ஜனவரி 18 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே சிகாரா திவராலாவை சேர்ந்த மால் சிங் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் திருமணமான 8 மாதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

     

    எனவே இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சரூப் கன்வரின் மாமனார், மைத்துனர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கே இந்தியாவின் கடைசி சதி வழக்காகும்.

    விடுதலை 

    1996 ஆம் ஆண்டு அக்டோபரில் மாமனார் - மைத்துனர் இருவருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2004 ஆம் ஆண்டு நடந்த விசாரணையில் ஆதாரங்கள் இல்லை என கூறி 25 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் சிறையிலேயே உயிரிழந்தார்கள்.

    6 பேர் ஜாமீன் வாங்கிக்கொண்டு தலைமறைவாகினர். இந்த வழக்கில் கைதானவர்களில் சிறையில் மீதமிருந்தது 8 பேர் மட்டுமே. மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் மற்றும் பன்வர் சிங் என்ற இந்த 8 பேருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என கூறி சதி நிவாரண நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

     

    புத்துயிர் 

    பெண் சிசுக் கொலை, கௌரவக் கொலை உள்ளிட்டவை இன்னும் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இவர்களின் விடுதலை வருங்காலங்களில் இந்துமத பழமைவாத கொடுமையான சதி மீண்டும் புத்துயிர் பெற ஊக்குவிக்கக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

    • மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள அஜ்மீர் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. காரில் தீப்பிடித்தது தெரிந்தவுடன் ஓட்டுநர் ஜிதேந்திர ஜாங்கிட் உடனடியாக காரை நிறுத்தி வெளியேறினார்.

    மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இல்லாத கார் முன்னாள் இருந்து பொதுமக்களை நோக்கி சாலையில் தானாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதனை பார்த்து அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். பின்னர் கார் அங்கிருந்த டிவைடரில் மோதி நின்றது.

    உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ராஜஸ்தானில் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஏழை மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஸ்கூட்டர்களை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது.

    ராஜஸ்தான் அரசின் முதன்மைத் திட்டமாக இது கருதப்படுகிறது. சுமார் 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் மூலம் 12 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கும் குறைவான குடும்பங்களில் இருந்து 11, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.

    இந்தத் திட்டத்தில் தேர்வு பெற, மாணவிகள் மாநில வாரியத் தேர்வுகளில் 65 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும், 10 அல்லது 12 ஆம் வகுப்புகளில் சிபிஎஸ்இ தேர்வுகளில் 75 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகவும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் வாங்கப்பட்டு வந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் தெற்கு ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் உள்ள வித்யாமந்திர் கல்லூரி மற்றும் ஹர்தேவ் ஜோஷி அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவை மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படாமல், வெயிலில் காய்ந்தும், புற்கள் மண்டியும் உள்ளதால் வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்கூட்டர்களை விரைவில் தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் ஆகியவற்றால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.
    • சாப்பாடு கேட்டால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்

    பெற்ற பிள்ளைகள் சோறு போடாமல் அடித்து துன்புறுத்தியதால் வயதான தாய்-தந்தை ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் ஹாசாரிராம் பிஸ்னாய் [70 வயது] மற்றும் அவரது, மனைவி சாவ்லி தேவி [68 வயது]. இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

    தங்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கக்கோரி தந்தை தாயை பிள்ளைகள் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்துள்ளனர். அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேப்பரில் எழுதி வீட்டின் சுவரில் ஒட்டிவைத்துள்ளனர்.

    அதில், 'மகன்கள், மகள்கள் என நால்வரும் சேர்ந்து சொத்துக்காக எங்களைத் துன்புறுத்துகின்றனர். எங்களைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு போதுமான உணவு அளிப்பதில்லை. இதுகுறித்து கேட்டதற்கு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் பிச்சையெடுக்க சொல்கினறனர்' என்று எழுதப்பட்டுள்ளது.

    மேலும் மகன்கள், தாய் தந்தையை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதை யாரிடமாவது சொன்னால் தூக்கத்திலேயே கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாக அந்த தற்கொலை கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீட்டின் தண்ணீர் தொட்டியிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் மகன்களில் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 'தற்கொலை செய்துகொண்டு பழியை எங்கள் மீது போட்டுவிடுவோம்' என்று தங்களை மிரட்டுவதாகத் தாய் தந்தை மீது புகார் கொடுத்திருக்கிறார்.

    தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.

    • உதய்பூர் அரண்மனைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை புரிந்தார்.
    • ஜனாதிபதியின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளனர்.

    அக்டோபர் 3 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்குச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் உதய்பூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார்.

    அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் லக்ஷ்யராஜ் சிங் மேவார் மற்றும் அவரது மனைவி நிவ்ரிதி குமாரி, ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று அரண்மனையின் வரலாறு மற்றும் மரபுகளை விளக்கினர். ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பாக்டே, துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் உடன் இருந்தனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜ்சமந்த் தொகுதி எம்பி மஹிமா குமாரி மேவார் மற்றும் அவரது கணவரும் நாத்வாரா எம்எல்ஏ விஸ்வராஜ் சிங் மேவார் ஆகிய 2 பாஜக பிரதிநிதிகளும் திரவுபதி முர்முவின் அரண்மனை வருகையை விமர்சித்துள்ளனர்.

    அரண்மனையின் சொத்து தகராறு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அரண்மனைக்கு ஜனாதிபதி வந்தது முறையல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பேசிய மஹிமா குமாரி மேவார், "அரண்மனையின் சொத்து தகராறு தொடர்பாக ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு முன்கூட்டியே தெரிவித்து அவரது வருகையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். ஆனாலும் அவர் அரண்மனைக்கு வருகை புரிந்தார். இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க உதய்பூர் மாவட்ட ஆட்சியரைதொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை" என்று தெரிவித்தார்.

    ஜனாதிபதியின் வருகை தனிப்பட்ட முறையிலானது என்றும் இதில் மாவட்ட நிர்வாகம் தலையிடவில்லை என்றும் உதய்பூர் ஆட்சியர் அரவிந்த் குமார் போஸ்வால் விளக்கம் அளித்தார்.

    • பாரத் அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான், பழங்காலத்திலிருந்தே நாம் இங்கு வாழ்கிறோம்.
    • கிருஷ்ணர் நினைத்திருந்தால் போரை தடுத்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

    இந்தியா என்பது அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரான் [Baran] நகரில் நடத்த சுயம்சேவக் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா அல்லது பாரத் அடிப்படையிலேயே இந்து ராஷ்டிரம்தான், பழங்காலத்திலிருந்தே நாம் இங்கு வாழ்கிறோம்.

     

    இந்து என்ற பதம் பலகாலம் கழித்தே வழக்கத்தில் வந்தது.இந்துக்கள் அனைவரையும் அரவணைப்பவர்கள், அவர்கள் ஒற்றுமையோடு வாழ்பவர்கள். சாதி, மதம், மொழி என்ற பாகுபாடுகளைச் சண்டைகளை மறந்து இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்.

    ஆனால் அனைத்துக்கும் கடவுளை எதிர்பார்க்கும் பழக்கம் இந்துக்களுக்கு உண்டு. ஆனால் தனது பிரச்சனைகளைத் தானே கவனித்துக் கொள்பவர்களுக்குத்தான் கடவுள் உதவி செய்வார். மகாபாரதத்தில் பாண்டவர்கள் தயாராக இருந்ததை அறிந்தபின்னரே பகவான் கிருஷ்ணர் அவர்களுக்குத் தேர் ஓட்டினார்.

    அவர் நினைத்திருந்தால் போரை தடுத்து அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் தங்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பாரத மாதாவைக் காப்பாற்ற நாம் முயற்சி எடுத்தாக வேண்டும். அந்த முயற்சியில் நம்மோடு அனைவரையும் அரவணைத்துக்கொள்ள வேண்டும். அதுவே நமது கலாச்சாரம், பாரம்பரியம் என்று தெரிவித்தார். 

    • ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை மீறி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
    • ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது.

    போலீஸ் பாதுகாப்புடன் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைர்வாவும் அவரது நண்பர்களும் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்ட படி பயணம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.

    இந்த சம்பவம் குறித்து பேசிய துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா, "என்னுடைய மகன் பள்ளி உயர் கல்வி தான் பயின்று வருகிறார், அவருடன் பள்ளி மாணவர்கள் தான் இருக்கிறார்கள். மகனுக்கு இன்னும் 18 வயது கூட ஆகவில்லை. மகான்களின் பாதுகாப்புக்காகவே போலீஸ் வாகனம் பின்னல் சென்றது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி பயண செய்ததற்காக ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விதிகளை மீறி ஜீப்பில் பெரிய அளவிலான டயரை பொருத்தியதற்காக 5000 ரூபாய் அபராதமும் சீட் பெல்ட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதமும் செல்போனில் பேசியபடியே பயணம் செய்தற்காக 1000 ரூபாய் அபராதம் என மொத்தமாக 7000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ×