என் மலர்


ஃபேமிலி படம்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 303 | 237 |
Point | 96 | 172 |
தம்பிக்காக திரைப்படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கும் குடும்பத்தின் கதை
கதைக்களம்
கதாநாயகனான உதய் கார்த்திக் திரையுலகில் இயக்குனராகும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இவரது அண்ணன்களான விவேக் பிரசன்னா வக்கீலாக உள்ளார் மற்றும் பார்த்திபன் குமார் ஐ. டி துறையில் வேலைபார்த்து வருகிறார். உதய் கார்த்திக் பல தயாரிப்பாளர்களிடம் கதை கூறியும் அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நாள் இவரது கதையை பிடித்து ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரிக்க முன் வருகிறார்.
மகிழ்ச்சியில் பட வேலைகளை தொடங்கும் உதய் கார்த்திக்கிற்கு சில பிரச்சனைகள் வருவதோடு, சில சூழ்ச்சிகளால் அவரது வாய்ப்பு நிராகரிக்கப்படுவதோடு, அவரது கதையும் சட்ட ரீதியாக திருடப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பும் உதய் கார்த்திக், தனது வாழ்க்கையே பறிபோய்விட்டதை நினைத்து வருந்துகிறார். அப்பொழுது இவரது குடும்பம் ஏன் நாமே திரைப்படத்தை தயாரிக்க கூடாது என முடிவு எடுக்கின்றனர். இதற்கான வேலை மற்றும் பணம் திரட்டுவதில் குடும்பம் ஈடுப்படுகிறது. உதய் கார்த்திகின் இயக்குனர் கனவு நிறைவேறியதா? குடும்பம் இதனால் ஏற்பட்ட கஷ்டங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
உதய் கார்த்திக், லட்சியங்களை சுமந்துக்கொண்டு பயணிக்கும் ஒரு இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார். பட வாய்ப்பு கிடைத்தவுடன் அவரது மகிழ்ச்சியும் அதே வாய்ப்பு அவரை விட்டு பறிபோனப்பின் அவர் வருத்தபடுவது என நடிப்பில் அசத்தியுள்ளார்.
நாயகனின் காதலியாக நடித்திருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு, எளிமையான பணி என்றாலும் அதை சரியாக செய்திருக்கிறார்.
நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தம்பியின் முயற்சிகளுக்கு துணையாக நிற்கின்ற வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு அண்ணனாக நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் கச்சிதம்.
அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி மற்ற வேடங்களில் நடித்த நடிகர்கள் அவர்களின் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
திரைப்படம் இயக்கும் முயற்சியில் , தயாரிப்பாளரை தேடும் உதவி இயக்குனர்களின் கதாப்பாத்திரம் தமிழ் சினிமாவில் ஏராளம் வந்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை தேடி அலையும் இயக்குனருக்கு தன் குடும்பம் பக்கபலமாக நின்று ஊக்குவித்து படத்தை தயாரிக்கும் முடிவை எடுப்பது புதுமையான ஒரு விஷயம் ஆகும் அதற்கு இயக்குனருக்கு பாராட்டுகள்.
கஷ்டமான சூழ்நிலையில் ஒரு குடும்பம் பக்க பலமாக இருந்தால் எதையும் தைரியமாக எதிர்க்கொண்டு சாதிக்கலாம் என்ற கருத்தை ஜாலியாகவும், பல எமோஷனல் காட்சிகளாக இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வ குமார் திருமாறன். படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். எமோஷனல் காட்சிகள் சில வொர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் , திரைப்படம் இறுதியில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தருகிறது.
இசை
அனீவி மற்றும் அஜேஷ் இன் இசை மற்றும் பாடல்கள் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் திறமையான வேலையை செய்துள்ளார்.
தயாரிப்பு
கே. பாலாஜி இப்படத்தை தயாரித்துள்ளார்.