search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்: சட்டசபையில் மசோதா தாக்கல்
    X

    தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

    • வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சியாக உயர்த்துவதற்கான வரையறைகளை மக்கள் தொகை மற்றும் வருமான அளவுகோல் தடையாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கான வரையறைகளை தளர்த்தி மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்தின்படி முன்பு இருந்த மக்கள் தொகை 3 லட்சத்திற்கு பதிலாக இரண்டு லட்சமாகவும், அந்த பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து 20 கோடி ரூபாயாக குறைத்து மாநகராட்சியாக மாற்றம் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு, இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதா நாளை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகிறது.

    Next Story
    ×