search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெரினாவில் 5 பேர் உயிரிழப்பு: விசாரணை ஆணையம் அமைக்க செல்வப்பெருந்தகை கோரிக்கை
    X

    மெரினாவில் 5 பேர் உயிரிழப்பு: விசாரணை ஆணையம் அமைக்க செல்வப்பெருந்தகை கோரிக்கை

    • வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழந்து இருக்கிறார்கள்.
    • 5 பேர் மரணத்தை காங்கிரஸ் அரசியலாக்க நினைக்கவில்லை.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    விமானப் படையினர் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் மரணம் நிகழாமல் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இது தமிழக அரசுக்கு படிப்பினை.

    கடந்த காலங்களில் மாலை நேரத்தில் தான் விமான கண்காட்சி நடந்தது. ஆனால் நேற்று உச்சி வெயிலில் விமான சாகசம் நடந்தது ஏன் என்பது தான் எங்களுடைய கேள்வி?

    தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும்.

    வெயில் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிய முடியும். அப்படி இருக்கையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடிய உச்சி வெயிலில் எதற்காக சாகசம் நடந்தது என்று விமானப் படை தெளிவுபடுத்த வேண்டும்.

    15 லட்சம் பேரும் ஒரே இடத்தில் கூடிய இடத்திலோ அல்லது செல்லும்போதும் மரணம் அடையவில்லை. வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழந்து இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் ஒருமுறைக்கு, பல முறை யோசித்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

    5 பேர் மரணத்தை காங்கிரஸ் அரசியலாக்க நினைக்கவில்லை. பாதுகாப்பு வசதி சரியாக செய்து இருக்கிறார்கள் என்று தமிழக அரசு சொல்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×