search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை அருகே மான்களை வேட்டையாடிய கும்பல்
    X

    செந்துறை அருகே மான்களை வேட்டையாடிய கும்பல்

    • 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது.
    • மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரி பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் நேற்று துப்பாக்கியால் சுடும் சத்தம் பல முறை கேட்டது. இதனையடுத்து அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து வேட்டை கும்பல் மான்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம்பிடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மான்களை சுட்டு வேட்டை யாடியது யார்? வேட்டைக்கு பயன்படுத்தியது நாட்டு துப்பாக்கியா? அல்லது லைசன்ஸ் துப்பாக்கியா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து மான்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதில் உள்ளது பால்ரஸ் குண்டா அல்லது துப்பாக்கி குண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் தெரிய வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.

    இந்த பகுதியில் மான்களை வேட்டையாடிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியில் ஒரு மான் விபத்தில் சிக்கி உயிர் இழந்தது. இதுகுறித்து செந்துறை போலீசார் மற்றும் வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×