search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பு வியாபாரி மீது மோட்டார் சைக்கிளை மோதவிட்டு ரூ.8 லட்சம் பறிப்பு- கத்தியாலும் வெட்டி மர்மகும்பல் துணிகரம்
    X

    இரும்பு வியாபாரி மீது மோட்டார் சைக்கிளை மோதவிட்டு ரூ.8 லட்சம் பறிப்பு- கத்தியாலும் வெட்டி மர்மகும்பல் துணிகரம்

    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை. வைத்தியநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் பாபு (47). இவர் வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரும்பு சப்ளை செய்த கடைகளில் இரவில் பணம் வசூல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் பிரகாஷ் பாபு நேற்று இரவு மண்ணடி பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் மொத்தம் ரூ.8 லட்சம் பணத்தை வசூல் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    மழை பெய்து கொண்டு இருந்ததால் அவர் கடற்கரைசாலையோரம் உள்ள ஒரு கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார். அப்போது அருகில் நின்ற வாலிபர் ஒருவர் பணப்பை மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் கவர் ஒன்றை கொடுத்தார். அதனை பணம் இருந்த பை மீது சுற்றி வைத்துக்கொண்டு பிரகாஷ் பாபு சிறிது நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரகாஷ்பாபு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய பிரகாஷ் பாபு மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். உடனே மர்ம நபர்களில் ஒருவன் அவரிடம் இருந்த ரூ.8 லட்சம் பணப்பைபை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ்பாபு கத்தி கூச்சலிட்டதும் மர்ம கும்பல் கத்தியால் அவரை தாக்கினர். இதில் பிரகாஷ் பாபுவின் வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் மர்ம கும்பல் ரூ.8 லட்சத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பலத்த காயம் அடைந்த பிரகாஷ்பாபு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவரது வலது கையில் 7 தையல் போடப்பட்டுள்ளது

    இதுகுறித்து பிரகாஷ்பாபு போலீஸ்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பிரகாஷ்பாபு பணம் வசூலித்து வருவதை அறிந்து மர்ம நபர்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அவரை நீண்ட நாட்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×