search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்... 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
    X

    மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்... 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

    • குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
    • ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும்

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.

    இதையடுத்து தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது. இதுதவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனு செய்திருந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் பணியாளர்கள் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர்.

    இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.

    அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த விழாவில் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.

    Next Story
    ×