என் மலர்
உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் நினைவு தினம்: போச்சம்பள்ளி அருகே இருதரப்பினரிடையே மோதல்-போலீஸ் குவிப்பு
- அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
- சுமூக நிலை ஏற்படாத நிலையில் போலீசார் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் வீட்டு மனை மற்றும் வீடு கட்டி கொடுத்த நிலையில் அப்பகுதியில் கிராம மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் அப்பகுதி மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு நிலம் கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் இது எங்களுக்கு சொந்தமான இடம் என கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும் இதுகுறித்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை கிராம மக்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் இந்த இடம் எங்களுக்கு சொந்தம் என்றும், இதில் யாருடைய புகைப்படத்திற்கும் மாலை அணிவிக்க கூடாது என்று கூறி சிலர் திடீரென்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுமூக நிலை ஏற்படாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மேலும் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் வாடமங்கலம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.