search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி 8 வயது சிறுமி பலியான சம்பவம்- ஊர்க்காவல் படை வீரர் கைது
    X

    கைதான வீரசின்னகண்ணன்.

    திருப்பூரில் போலீஸ் வாகனம் மோதி 8 வயது சிறுமி பலியான சம்பவம்- ஊர்க்காவல் படை வீரர் கைது

    • காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் வீரசின்னகண்ணன் என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    • வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இன்று காலை கைது செய்தனர் .

    திருப்பூர்:

    திருப்பூா் விஜயாபுரம் செந்தில்நகா் பகுதியை சோ்ந்தவா் ஜெயராஜ், இவரது மனைவி ராஜே ஸ்வரி (வயது39). ஜெயராஜ் குவைத் நாட்டில் டெய்லராக பணியாற்றி வருகிறாா். இந்தத் தம்பதியின் மகன் சஞ்சய் (18), மகள் திவ்யதா்ஷினி (8). விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் திவ்யதா்ஷினி 3-ம் வகுப்பு படித்து வந்தாா்.

    இந்நிலையில் ராஜேஸ்வரி, பள்ளியில் இருந்து திவ்யதா்ஷினியை அழைத்துக் கொண்டு விஜயாபுரத்தில் இருந்து நல்லூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தாா். நல்லூா் காவல் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ராஜேஸ்வரியின் இருசக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் திவ்யதா்ஷினி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

    ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்து அங்கு திரண்ட பொதுமக்கள், காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் வீரசின்னகண்ணன் (32) என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூா் போலீசார் வீரசின்னகண்ணனை பொதுமக்களிடமிருந்து மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

    இந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்தவா் வேகமாக வாகனத்தை இயக்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, வீரசின்னகண்ணனை கைது செய்வதுடன், சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

    இதனிடையே மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

    இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வீரசின்ன கண்ணன் மீது 304 ஏ பிரிவின் கீழ் அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இன்று காலை கைது செய்தனர் .

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×