search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டசபையில் விதிமுறைகளுக்கு உட்பட்டே விவாதிக்க முடியும்- துரைமுருகன் விளக்கம்
    X

    சட்டசபையில் விதிமுறைகளுக்கு உட்பட்டே விவாதிக்க முடியும்- துரைமுருகன் விளக்கம்

    • விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன.
    • கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அவை முன்னவரான துரை முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் இன்று விரும்பத்தகாத சில நிகழ்வை எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ளன. இது வருத்தமடைய செய்யும் வகையில் அமைந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும், வாதாடுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அது விதிமுறைகளுக்குட்பட்டுதான் இருக்க வேண்டும். சபை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது எதிர்க்கட்சி தலைவருக்கும் தெரியும். அவர் முதல்-அமைச்சராக இருந்தவர்.

    கேள்வி நேரம் முடிந்த பிறகே பிரச்சினைகளை பற்றி பேச முடியும். ஆனாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்கலாம் என இருந்தேன். ஆனால் அவர்கள் யாரும் உட்கார வில்லை. விஷச்சாராயம் பற்றி பேசுவதற்கோ, ஆட்சியை பற்றி பேசுவதற்கோ எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு.

    ஆனால் கேள்வி நேரத்தில் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க கூடாது. சட்டசபையை விட்டு வெளியே போகிற முனைப்புடனேயே அவர்கள் நடந்து கொண்டனர். அதற்காக ஆச்சரியப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    எதிர்க்கட்சியினர் ஜீரோ நேரத்தில் பேசலாம். இங்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் அளித்துள்ளனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும் அவையில் பதாகைகளை கொண்டு வந்து காட்டுவது சட்டத்துக்கு புறம்பானது.

    அவர்கள் அனுமதியின்றி இங்கு நடந்து கொண்டது இந்த அவையின் மாண்பை மீறுவதாக இருந்ததால் இன்று ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    Next Story
    ×