search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் சாரை சாரையாக படையெடுக்கும் வவ்வால்கள்: நிபா வைரஸ் பரவும் அபாயம்
    X

    திருப்பூரில் சாரை சாரையாக படையெடுக்கும் வவ்வால்கள்: நிபா வைரஸ் பரவும் அபாயம்

    • இரவு ராட்சத வவ்வால்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது.
    • அச்சமூட்டும் விதமாக சாரை சாரையாக பறந்து திரிகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் தனலட்சுமி மில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த இந்த மில் மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பூட்டி இருக்கும் இந்த மில் காம்பவுண்டில் ஏராளமான மரங்கள்,செடிகள் வளர்ந்து புதர்க்காடாக மாறி உள்ளது.

    காம்பவுண்டில் உள்ள கட்டிடங்களும் பாழடைந்து கிடக்கின்றன. திருப்பூர் மாநகரின் மத்தியில் உள்ள போதும், இந்த மில் காம்பவுண்ட் மட்டும் முழு காடாகவே இருக்கிறது. இதனால் இங்குள்ள மரங்களில் ஏராளமான வவ்வால்கள் கூடுகட்டி வசிக்கின்றன.

    பல்லாயிரக்கணக்கான ராட்சத வவ்வால்கள் பகல் முழுக்க இங்குள்ள மரங்களிலும், கட்டிடங்களிலும் தலைகீழாக அமைதியாக தொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன.

    ஆனால் இரவு தொடங்கினால் ராட்சத வவ்வால்களின் ஆட்டம் ஆரம்பித்து விடுகிறது. இரவாக தொடங்கும் போதே பெருங்கூச்சலுடன் கூட்டம் கூட்டமாக கிளம்பும் இந்த ராட்சத வவ்வால்கள் அருகில் உள்ள கொங்கு மெயின்ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், கே.பி.என்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு படையெடுத்து விடுகின்றன.

    வீடுகளில் உள்ள அறைகள், பார்க்கிங் பகுதிகள், வளாகங்கள் என அனைத்துப்பகுதிகளிலும் சாரைசாரையாக பறந்து வட்டமிடும் இந்த வவ்வால்கள் இந்த பகுதி வீடுகளை எச்சங்களால் நிரப்பி துர்நாற்றம் வீசச் செய்கின்றன.

    மேலும் பொதுமக்களை அச்சமூட்டும் விதமாக சாரை சாரையாக பறந்து திரிகின்றன. மாலை மங்கினாலே பெண்கள், குழந்தைகள் வீடுகளை விட்டு வாசலுக்கு கூட வர அஞ்சும் அளவுக்கு இந்த பகுதிகளின் நிலை உள்ளது.

    எனவே வவ்வால்களில் எச்சத்தால் குடியிருப்பு பகுதிகள் துர்நாற்றம் வீசுவதுடன், வவ்வால்களால் பரவக்கூடிய நிபா உள்ளிட்ட கொடூரமான வைரஸ் நோய்கள் பரவக்கூடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வவ்வால்களை அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×