search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.87,500 பறிமுதல்
    X

    சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.87,500 பறிமுதல்

    • பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் அதற்கான ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர்.
    • 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினர்.

    மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை 6 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.87,500யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் அதற்கான ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர்.

    இந்த அலுவலகத்தில் 2 ஆண்டுகளாக தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்த பரமேஸ்வரி (வயது56) என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரிடம் போலீசார் பத்திரப்பதிவுகள் குறித்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் இது தொடர்பாக ஆவணங்களையும் சேகரித்தனர். சோதனையின் போது அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டன. மேலும் இணை சார்பதிவாளர் பரமேஸ்வரி, அலுவலக உதவியாளர்கள் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×