search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோடியின் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தில் 554 பேருக்கு பணி நியமன ஆணை
    X

    மோடியின் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தில் 554 பேருக்கு பணி நியமன ஆணை

    • நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
    • மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    நாடு முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.

    இந்த திட்டத்தின் கீழ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி வழங்கினார்.

    பணி நியமன முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கும் உறவு முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    வேலை வழங்கும் (ரோஸ்கர் மேளா) திட்டம் என்பது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தேசிய வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதுமாகும். இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதே நேரத்தில் நாடு முழுவதும் 45 இடங்களில் மோடியின் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டு பணி ஆணைகளை மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்கள்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தபால் துறை ஊழியர், தபால் துறை ஆய்வாளர், ரெயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்காளர், தண்டவாளப் பராமரிப்பாளர், உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை எழுத்தர், துணைப் பிரிவு அலுவலர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமைக் காவலர், உதவி கமாண்டன்ட், பள்ளி, கல்லூரி முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய 3 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.

    சென்னையில் அஞ்சல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி தி.நகர் வாணிமகாலில் நடந்தது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்று பணி ஆணைகள் வழங்கி ஆற்றிய உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    அதை தொடர்ந்து 11.05 மணிக்கு சென்னை மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 247 பேருக்கு வேலைக்கான பணி ஆணைகளை நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

    இவர்களில் 188 பேர் அஞ்சல் துறையிலும், ரெயில்வே துறையில் 60 பேரும், பாதுகாப்பு மற்றும் கல்வித்துறையில் தலா 15 பேரும், பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறையில் 8 பேரும், சுகாதாரத்துறையில் ஒருவருக்கும் வேலை வழங்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் பிரதமரின் திட்டம் பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. வேலைவாய்ப்பு பெற்றவர்களுடன் கலந்துரையாடிய நிர்மலா சீதாராமன் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் முதன்மை அஞ்சல்துறை தலைவர் சாருகேசி, அஞ்சல் மற்றும் வணிக மேம்பாட்டு பிரிவின் தலைவர் ஸ்ரீதேவி, சென்னை மண்டல இயக்குனர் சோம சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருச்சி ரெயில்வே மகாலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டு திருச்சி மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 127 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 180 பேர் தபால் துறையிலும் 20 பேர் ரெயில்வே துறையிலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.

    சென்னையில் 247 பேர், திருச்சியில் 127 பேர், மதுரையில் 180 பேர் என மொத்தம் தமிழகத்தில் 574 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×