search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் உடல் இன்று மாலை அடக்கம்
    X

    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் உடல் இன்று மாலை அடக்கம்

    • மடுகரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன்.

    94 வயதான எம்.டி.ராமச்சந்திரன் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார்.

    இதனையடுத்து சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. சென்னை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று மாலை எம்.டி.ஆர்.ராமசந்திரன் காலமானார்.

    மறைந்த புதுச்சேரி முன்னாள் முதல்- அமைச்சார் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் நெட்டப்பாக்கம் தொகுதியில் 1969-ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

    அதன்பிறகு மண்ணாடிப் பட்டு தொகுதியில் 1974, 1977 ஆகிய ஆண்டுகள் அ.தி.மு.க. சார்பிலும், 1980, 1985, 1990 ஆகிய ஆண்டுகள் தி.மு.க. சார்பிலும், 2001-ல் மீண்டும் அ.தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டு 7 முறை எம்.எல்..ஏ.வாக வெற்றி பெற்றவர்.

    இதில் 16.1.1980 முதல் 23.6.1983 வரையும், 8.3.1990 முதல் 2.3.1991 வரையும் என 2 முறை புதுச்சேரி முதல்- அமைச்சராக பதவி வகித்தவர். 11.6.2001 முதல் 26.5.2006 வரை புதுச்சேரி சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    மறைந்த எம்.டி.ராமச் சதிரன் உடல் சொந்த ஊரான மடுகரையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ராமச்சந்திரன் மறைவிற்கு அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    Next Story
    ×