search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சேரியை தூய்மை நகரமாக உருவாக்க கவர்னர் உத்தரவு
    X

    புதுச்சேரியை தூய்மை நகரமாக உருவாக்க கவர்னர் உத்தரவு

    • திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
    • முறையாக குப்பைகள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிறுவனங்கள் சரிவர குப்பையை அகற்றுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

    இதனிடையே குப்பை அள்ளும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான கோப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சென்றது. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரிவர குப்பை அள்ளாததால் அந்த கோப்புக்கு கையெழுத்திடவில்லை. இதனால் அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் உள்ளாட்சித்துறை இயக்குனர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், நகராட்சி ஆணை யர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் தற்போது இந்தியாவின் தூய்மையான நகரமாக அடையாளம் காணப்படுகிறது.

    வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தூய்மையான நகரமாக புதுச்சேரியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை அடுத்த 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உருவாகும் குப்பைகளில் இதுவரை 85 சதவீதம் மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கடை வீதிகள் போன்ற அதிக குப்பை சேரும் இடங்களில் இருந்து முறையாக குப்பைகள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    கட்டிடம் இடிக்கப்பட்டால் இடிபாடுகள் அதற்கான இடங்களில் கொட்டப்பட வேண்டும் கழிவுநீர் வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும். தேவையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி திடக்கழிவு மேலாண்மையை பலப்படுத்த வேண்டும்.

    குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் முறை யாக மறுசுழற்சி செய்யப் படுவதை உறுதி செய்து, அங்கு தயாரிக்கப்படும் உரம், வண்டல் மண் ஆகியவை விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க வழிவகை காண வேண்டும்.

    வீடுகளில் குப்பை கழிவுகள் வெளியேற்றப்படுவது தொடர்பாக பள்ளி மாண வர்கள் மத்தியில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கி ணைந்து திட்டமிட்ட செயல்பாடு, பணியில் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாக மக்கள் பணம் மக்களுக்கே முறையாக பயன்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களோடு கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×