search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்ற கல்விக்கு ஏற்படும் தடைகளை உடைப்பேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்ற கல்விக்கு ஏற்படும் தடைகளை உடைப்பேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது.
    • இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது.

    காலை உணவு திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என்ன ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் நம் அரசு உடனடியாக அதை கவனத்தில் எடுத்து தீர்த்து வைக்கிறது. நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம்.

    பொய் செய்திகள் மூலம் ஒரு சில கருத்துக்கு வாசகங்கள் உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கிற மக்கள் விரோத சக்திகளின் அஜண்டா எந்த காலத்திலும் நடக்காது.

    ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பயனபெறக் கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக காலை உணவுத் திட்டம் நமது திராவிட மாடல் அரசுக்கு நீடித்த புகழை தேடித்தந்துள்ளது.

    நாம் தொடங்கிய பின்புதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த ஊரிலேயும், எந்த பள்ளியிலும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது.

    உங்கள் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி கவனமாக பார்த்துக் கொள்வீர்களோ அந்த மாதிரி, அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சாப்பாட்டையும் கவனமாக சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    நான் ஆய்வுக்கு வெளியூர் போகும்போது ஏதாவது ஒரு பள்ளிக்கு திடீரென்று செல்கிறேன். அங்கிருக்கும் பிள்ளைகளுடன் பேசுகிறேன். காலை உணவு எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன். அந்த உணவை நானே சாப்பிட்டும் பார்க்கிறேன்.

    அமைச்சர் உதயநிதி கூட சுற்றுப்பயணம் போகும் போதும், நிகழ்ச்சிகளுக்கு போகும்போதும் இந்த மாதிரி ஆய்வு செய்வதை பார்க்கிறேன். மற்ற அமைச்சர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். எ

    எனவே மற்ற அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட கலெக்டர்களும், அதிகாரிகளும் அவரவர் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் திடீர் திடீரென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரொம்ப பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.

    திராவிட மாடல் அரசையும், என்னையும் பொருத்த வரைக்கும் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று நினைக்கி றோம். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடையை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி.

    நீட் தேர்வை நான் எதிர்க்கத் தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் எதிர் கேள்வி கேட்டனர். ஆனால் இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கிற முறைகேடுகளை பார்த்து உச்சநீதிமன்றமே கேள்வி கேட்கிறது.

    மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகிறது. பல முதல்-அமைச்சர் கள், தேசிய தலைவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசிய லுக்காக இப்போது நெருக்கடி நிலையை பற்றி பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறது.

    ஆனால் நாம் அவர்களி டம் கேட்கும் கேள்வி, நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநில பட்டிய லுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா? நம்மை பொருத்தவரை நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை தேவையற்றது.

    அதனால்தான் எதிர்க்கிறோம். ஒரு பக்கம் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்துகிறோம். இன்னொரு புறம் மாணவர்களின் நன்மைக்காக பள்ளிக்கல்வி, கல்லூரிகள், உயர்கல்விகளுக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம். எனவே தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    நான் திரும்பவும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும். மாணவச் செல்வங்களே படியுங்கள். நீங்கள் உயர படியுங்கள். நீங்கள் உயர உங்கள் வீடும் உயரும். இந்த நாடும் உயரும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×