என் மலர்
உள்ளூர் செய்திகள்
கை.களத்தூரில் டிரைவர் வெட்டிக்கொலை சம்பவம் எதிரொலி: சப்-இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் அதிரடி மாற்றம்
- மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீசி முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ஏட்டு ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ்பசேரா உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலுார்:
பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 36), மணிகண்டன் (35) ஆகியோர் டிரைவர்களாக வேலை செய்தனர். நேற்று முன்தினம் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை கை.களத்துார் ஏட்டு ஸ்ரீதர் சமாதானப்படுத்தினார்.
பின்னர் மணிகண்டனை அவரது வீட்டிற்கு ஸ்ரீதர் அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த தேவேந்திரன், மணிகண்டனை போலீஸ் கண்ணெதிரே வெட்டிக் கொன்றார். இதையறிந்த மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் மீது கல்வீசி முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார், எஸ்.பி. ஆதர்ஷ்ப சேரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இது குறித்து மணிகண்டன் மனைவி மீனா (25) கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மணிகண்டனின் மனைவி மீனாவிற்கு அரசு சார்பில் முதற்கட்ட நிதி உதவியாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் விசாரித்து கை களத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொளஞ்சியப்பன், மணிவேல், குமார் ஆகியோரை ஆயுதபடைக்கும், சண்முகத்தை காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றி உத்தரவிட்டார்.
கை.களத்துார் ஸ்டேஷனில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏட்டு ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ்பசேரா உத்தரவிட்டுள்ளார்.