என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கன்னியாகுமரி
- காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.
வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா நேற்று வயநாடு வந்தார். அவருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் வயநாட்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வயநாட்டில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் மானந்தவாடி காந்தி பார்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.
இந்நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவிலில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
- இந்நிகழ்ச்சியில் பலர் உடன் இருந்தனர்.
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர், செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை பாராளுமன்ற காங்கிரஸ் பொருளாளரும், வர்த்தக காங்கிரஸ் மாநில தலைவருமான விஜய் வசந்த் எம்.பி. நாகர்கோவிலில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் ஆரோக்கிய ராஜன், பொதுச் செயலாளர் பால் டேனியல், செயலாளர் கிங்ஸ்லின், துணைத்தலைவர் ராம் மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமன் லட்சுமணன், வர்த்தக காங்கிரஸ் ஆலோசகர் முகமது சாகுல் அமீது மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினவிழா நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி குமரி தந்தை மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
குமரி தினத்தை முன்னிட்டு குமரி தந்தை மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர்.
- அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தக்கலை, மாம்பழத்துறையாறு, ஆணை கிடங்கு பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.
தக்கலையில் அதிகபட்சமாக 85.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, இரணியல், ஆணைக்கிடங்கு, குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை, சிற்றாறு-1, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.71 அடியாக உள்ளது. அணைக்கு 404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 506 கன அடி தண்ணீரும், உபரிநீராக 492 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.16 அடியாக உள்ளது. அணைக்கு 422 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.04 அடியாக உள்ளது. அணைக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து அணையிலிருந்து 62 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 7, பெருச்சாணி 23.6, சிற்றார் 1-9.6, சிற்றார் 2-3.8, மயிலாடி 5.2, பூதப்பாண்டி 8.2, முக்கடல் 39.2, பாலமோர் 14.4, தக்கலை 85.4, குளச்சல் 8, இரணியல் 24, அடையாமடை 61.6, குருந்தன்கோடு 6, கோழிப்போர்விளை 10.8, மாம்பழத்துறையாறு 83, ஆனைக்கிடங்கு 82.2, களியல் 5.8, குழித்துறை 8, சுருளோடு 7.2, புத்தன் அணை 22.2, திற்பரப்பு 47.2, முள்ளங்கினாவிளை 8.6.
- கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
- இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
கன்னியாகுமரி:
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்றும் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி 3 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
அதனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, மருந்துவாழ் மலை, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை "திடீர்" என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கோழி கழிவுகளுடன் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையோரம் டெம்போ நிறுத்தி வைக்கப்பட்டது.
- டெம்போவை களியக்காவிளை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இரணியல்:
கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கேரளா மாநிலம் பாறசாலையில் இருந்து டெம்போ குமரி மாவட்டத்திற்கு வந்தது. அந்த டெம்போ வரும்போது சாலை முழுவதும் நீர் வடிந்தவாறு சென்றது. அந்த டெம்போ செல்லும்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த டெம்போவை வாலிபர்கள் சிலர் பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். இரணியல் அருகே வில்லுக்குறி பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுடன் சேர்ந்து அந்த டெம்போவை சிறை பிடித்தனர்.
இது குறித்த தகவல் பரவியதும் அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். அதேபோன்று நாம் தமிழர் கட்சியினரும் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார், வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் ராமு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். களியக்காவிளை சோதனை சாவடியை தாண்டியே இந்த கழிவு ஏற்றி வரும் லாரிகள் வருகிறது. அங்குள்ள சோதனை சாவடியில் உள்ள போலீசார் ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கழிவு ஏற்றி வந்த டெம்போவிற்கு பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து, டெம்போவை களியக்காவிளை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனால் கோழி கழிவுகளுடன் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையோரம் டெம்போ நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனிடையே டெம்போவிற்கு அபராதம் விதிக்க வேண்டும். கோழி கழிவுகளுடன் டெம்போவை குமரி எல்லை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் விடிய விடிய அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
- கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் புகழை உலகமெங்கும் கொண்டு சென்றிடும் வகையிலும், அவருக்காக கன்னியாகுமரியில் கட்டப்பட்ட சிலையின் சிறப்பை பறைசாற்றும் வகையிலும், திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.
I have formally requested the Hon'ble Culture Minister, @gssjodhpur, to nominate the iconic Thiruvalluvar Statue in Kanyakumari for UNESCO World Heritage Status.
— Vijay Vasanth (@iamvijayvasanth) October 25, 2024
This monumental statue honors the great Tamil poet and philosopher Thiruvalluvar, whose timeless verses in the… pic.twitter.com/PgNvA51sG3
- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படும் நிலையில் உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.
மாவட்டம் முழுவதும் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் அழகுமீனா வெளியிட்டார். தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மலையோர கிராமங்களில் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மோதிரமலை, கல்லாறு, கிழவி ஆறு, குற்றியாறு பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலையோர கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
நாகர்கோவிலிலும் நேற்று இரவு பொய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. காலையிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அசம்புரோடு, கோட்டார் சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கனமழையின் காரணமாக நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தக்கலை, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, இரணியல், குளச்சல், மயிலாடி பகுதிகளில் நேற்று இரவு மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 110.6 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கொட்டாரம், பூதப்பாண்டி, இரணியல், களியல், குழித்துறை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டித்தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளில் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் உபரிநீர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ரம்மியமான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். வேர்கிளம்பி, குலசேகரம், கருங்கல் பகுதியில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தடுப்பணையை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரியிலும் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. இன்று காலையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் லாட்ஜிலேயே முடங்கி கிடந்தனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.51 அடியாக உள்ளது. அணைக்கு 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 455 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.66 அடியாக உள்ளது. அணைக்கு 685 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 28.8, பெருஞ்சாணி 55.6, சிற்றாறு 1-23.2, சிற்றாறு 2-24.6, கொட்டாரம் 16.2, மைலாடி 65.2, நாகர்கோவில் 52, கன்னிமார் 19.6, ஆரல்வாய்மொழி 15, பூதப்பாண்டி 62.6, முக்கடல் 30.5, பாலமோர் 59.2, தக்கலை 16.4, குளச்சல் 76, இரணியல் 98.6, அடையாமடை 62.2, குருந்தன்கோடு 72.6, கோழிப்போர்விளை 110.6, மாம்பழத்துறையாறு 59.6, ஆணை கிடங்கு 59.2, களியல் 32.6, குழித்துறை 28.2, புத்தன் அணை 54.2, சுருளோடு 51.4, திற்பரப்பு 39.2, முள்ளங்கினாவிளை 48.4.
- தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- கனமழை எதிரொலியாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
- காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த ரோடு-ஷோவில் பங்கேற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அன்னை சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ இன்று பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்கான ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் அவரது குரல் உயர்ந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அசாதாரண பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
- மின்சார பேருந்துகளின் நடைமுறை சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது.
கீரீன்செல் மொபிலிட்டியின் கீழ் இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் இன்டர்சிட்டி பஸ் பிராண்டான நியுகோ (NueGo), தனது வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான (E-K2K) மின்சாரப் பேருந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதை அறிவித்துள்ளது.
இந்த அற்புத பயணம் 4,000 கிலோமீட்டர்களுக்கு மேல் நீடித்தது, 200 க்கும் மேற்பட்ட டவுன்கள் மற்றும் நகரங்களில் பொது ஈடுபாடுகளை மேற்கொண்டது. இந்த பயணம் நீண்ட தூர பயணத்திற்கான மின்சார பேருந்துகளின் நடைமுறை சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நீண்ட பயணத்தை எம்.பி. விஜய் வசந்த் கன்னியாகுமரியில் இறுதி E-K2K பேருந்தைக் கொடியசைத்து முடித்துவைத்தார். இது அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கி பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து பசுமையான நடமாட்டத்தின் செய்தியை ஊக்குவிக்கும் ஒரு அசாதாரண பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த விஜய் வசந்த், "NueGoவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான (E-K2K) மின்சாரப் பேருந்து பயணம் உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சி! 200 டவுன்கள் மற்றும் நகரங்கள் வழியாகச் செல்லும் போது, 4,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்களைக் கடந்து, பல்வேறு சமூக ஈடுபாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், NueGo நாடு முழுவதும் மின்சார வெகுஜன இயக்கம் மற்றும் மக்களுக்கும் பூமிக்கும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பியுள்ளது. இந்த பயணம் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் மின்சார பேருந்துகளின் தாங்குதிறனை நிரூபிக்கிறது" என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்