search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை- ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை
    X

    நெல் வியாபாரியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை- ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை

    • கொள்ளையர்களை பிடிக்க உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய தெருவான நகர எல்லைக்குள் நடந்த கொள்ளை சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 27). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து நெல் வியாபாரம் செய்து வருகிறார். காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வெளிச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை ரூ.30 லட்சம் பணத்தை நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து அரவிந்தன் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைத்துக்கொண்டு புதுவயல் நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரும்பாலான சமயங்களில் அதிக பணத்தை வசூல் செய்ய செல்லும்போது உதவிக்காக உறவினர், நண்பர்கள் யாரையாவது துணைக்கு அழைத்து செல்வதை அரவிந்தன் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தான் மட்டும் வசூல் பணத்துடன் தனியாக சென்றார். அவர் காரைக்குடி செக்காலை சாலை, ஜாகிர் உசேன் தெருவில் வந்த போது இரண்டு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

    அவர்கள் திடீரென்று பின்னால் வந்து அரவிந்தனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். இதில் நிலை குலைந்த அரவிந்தன் கீழே விழுந்தார். அடுத்த விநாடி அந்த 4 பேரும் சேர்ந்து அரவிந்தன் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்தனர். இதனால் கண் எரிச்சலுடன் நடுரோட்டில் துடித்த அவரை மிரட்டி இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் அவரை தாக்கி விட்டு அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தையும் திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் அரவிந்தன், காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் விசாரணை நடத்தினார்.

    அரவிந்தன் பணம் வசூலுக்கு வழக்கமாக சென்று வருவதை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அது தெரிந்த நபர்களாகவும் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய தெருவான நகர எல்லைக்குள் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×