search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.கே.நகர் டிரைவர் எரித்துக்கொலை: சரண் அடைந்த ஏட்டு-ரவுடியை போலீசார் காவலில் எடுக்கிறார்கள்
    X

    கே.கே.நகர் டிரைவர் எரித்துக்கொலை: சரண் அடைந்த ஏட்டு-ரவுடியை போலீசார் காவலில் எடுக்கிறார்கள்

    • ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது.
    • டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கார் டிரைவர் ரவி கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோயம்பேட்டைச் சேர்ந்த ஏட்டு செந்தில்குமார், டிரைவர் ரவியை கொலை செய்து ஆம்னி வேனில் உடலை கடத்திச் சென்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரிய வந்தது. ஏட்டு செந்தில்குமாரின் காதலியான கவிதாவுக்கும், கொலையுண்ட ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் ஏற்பட்ட தகராறில் ரவி, செந்தில்குமாரை தாக்கி உள்ளார். இந்த மோதலே கொலையில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து ஏட்டு செந்தில் குமாரையும் ஐசக் உள்பட 4 ரவுடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வநதனர். போலீஸ் பிடி இறுகியதால் ஏட்டு செந்தில்குமாரும், ரவுடி ஐசக்கும் நெல்லை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

    மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம், 2 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வருகிற 16-ந்தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து ஏட்டு செந்தில் குமாரும், ரவுடி ஐசக்கும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். செங்கல்பட்டு கோர்ட்டில் வருகிற 16-ந்தேதி ஏட்டு செந்தில்குமாரும், ஐசக்கும் ஆஜர்படுத்தப்படும் போது படாளம் போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனு அளிக்க உள்ளனர்.

    டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுக்கும் போது, ஏட்டு செந்தில்குமார், ரவுடி ஐசக் இருவரையும் கொலை நடந்த வீடு, உடல் எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த கொலை வழக்கில் ஐசக்கின் கூட்டாளிகளான எட்வின், மகி, கார்த்தி ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 3 ரேையும் பிடிக்க போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏட்டு செந்தில்குமாரின் காதலி கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×