search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலம் மோசடி புகார்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திடீர் சோதனை
    X

    நிலம் மோசடி புகார்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திடீர் சோதனை

    • சி.பி.சி.ஐ.டி. இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர்.
    • வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரணை.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

    இவர் மீது கரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் நிலமோசடி புகார் அளித்தார்.

    நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வரும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தன்னை ஏமாற்றி, மிரட்டி ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துக் விட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

    பின்னர் இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதையடுத்து விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர்.

    கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் தாளப்பட்டி மணல்மேடு பகுதியில் உள்ல யுவராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதில் நிலமோசடி தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என சல்லடை போட்டு தேடினர். வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

    இந்த சோதனையில் திருச்சி நாமக்கல் சேலம் மாவட்டங்களை சேர்ந்த சி பி சி ஐ டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த சோதனை கரூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×