என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மேலூர் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை மேலூர் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை](https://media.maalaimalar.com/h-upload/2025/02/07/9035622-melur.webp)
மேலூர் அருகே கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாண்டிகுமரன் (வயது 20). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று இரவு இவர் தனது பாட்டியை அழைத்துக் கொண்டு காரில் மேலூர் அருகே உள்ள சுக்காம்பட்டிக்கு சென்றார். அங்கு பாட்டியை உறவினர் வீட்டில் இறக்கி விட்ட பின்னர் மீண்டும் தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரது நண்பர் கிஷோர் என்பவர் செல்போனில் அழைத்து உன்னிடம் முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும். சுக்காம்பட்டி விலக்கு ரோட்டில் காத்திருக்கிறேன், உடனேவா என கூறியுள்ளார்.
இதையடுத்து பாண்டி குமரன் காரில் சென்று கிஷோரை சந்தித்து பேசினார். அப்போது கிஷோருடன் மற்ற சிலரும் உடன் இருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே திடீரென்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த கிஷோர் மற்றும் அவருடன் இருந்த சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டி குமரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து தகவலறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாண்டிகுமரன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.