search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தமிழ் முருகன் மாநாடு கால அவகாசம் நீடிப்பு-அமைச்சர் பி.கே.சேகர்பாபு
    X

    முத்தமிழ் முருகன் மாநாடு கால அவகாசம் நீடிப்பு-அமைச்சர் பி.கே.சேகர்பாபு

    • கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

    இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.7.2024-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 10.7.2024-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×